இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நிலவிய இன மோதலுக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக, நோர்வே நாட்டின் அனுசரணையுடன் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தை காலகட்டம் (2002-2006) இலங்கை வரலாற்றில் ஒரு மிக முக்கியமான திருப்புமுனையாகும்.
அச்சந்தர்ப்பத்தில் தமிழீழத்தை அங்கீகரிக்கத் தயாராக இருந்த உலகத்தின் ஒரே நாடும் எரித்திரியா தான் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
எரித்திரியாவின் 30 வருடகால போராட்டம்
எத்தியோப்பியாவிடமிருந்து 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்திற்குப் பிறகு 1993 இல் விடுதலை பெற்ற எரித்திரியா, தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு முன்மாதிரியாகவும் (Model), அதன் பின்னணியில் சில தொடர்புகளைக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
வலையொளி தளமொன்றில் நடைபெற்ற அரசியல் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாட்டலி இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து பேசிய அவர்,
எரித்திரியா பிரிந்து சென்றபோது, அங்கு முஸ்லிம் மக்களை விட கிறிஸ்தவ மக்கள் தொகையே அதிகமாக இருந்தது. எத்தியோப்பியாவிலிருந்து அது பிரிவதற்கு ஐரோப்பாவும், குறிப்பாக நோர்வேயும் உதவியது.
அப்போது எரித்திரியாவுக்கு வழங்கப்பட்ட அந்தத் தீர்வுதான் இலங்கையிலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டது.
சமாதான பேச்சுவார்த்தையின் போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்குக்கு வழங்கப்பட்ட அந்த இடைக்கால நிர்வாகத்தின் வரைபடம் (Blueprint) என்பது இந்த ‘எரித்திரிய வரைபடம்’ அதாவது அவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்வாகும்.
தற்போதைய நிலையில், எரித்திரியா மீது அமெரிக்காவுக்கு நல்லெண்ணம் இருக்கவில்லை. ஆனால் ஹூதிகளின் வெற்றியுடன், செங்கடலின் முக்கியத்துவத்தைக் கருத்திற் கொண்டு எரித்திரியா மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்துத் தடைகளையும் அமெரிக்கா நீக்கியுள்ளது.
இப்போது தடைகளை நீக்கி, எரித்திரியாவைத் தங்கள் பக்கம் இழுப்பது வேறு எதற்குமில்லை; ஹூதிகளுக்கு எதிரான போரை நடத்துவதற்குத் தேவையான இராணுவத் தளத்தை அங்கு அமைப்பதற்காகவே என குறிப்பிட்டார்.