மதுரை மக்களுக்கு ஒரு முக்கிய செய்தியாக, வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி தமிழக முதல்வர் விஜய் மதுரைக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின் போது, அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு வாய்ந்த ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை அவர் முறைப்படி தொடங்கி வைக்கிறார்.
முதல்வரின் வருகையை முன்னிட்டு மதுரை மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகம், மகப்பேறு மருத்துவமனை கட்டிடம் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு ஆகிய இடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு விழாவுக்குத் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, முதல்வரின் தனிப்பிரிவு பாதுகாப்பு எஸ்பி மதன் தலைமையிலான காவல்துறையினர் மருத்துவமனை வளாகத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் 4,000-க்கும் மேற்பட்ட போலீசார் விரிவான பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அன்றைய தினம் காலை 11 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தடையும் முதல்வர் விஜய், அங்கிருந்து நேரடியாக சமீபத்தில் குடமுழுக்கு விழா கண்ட புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்கிறார். தரிசனம் முடிந்ததும், அரசு ராஜாஜி மருத்துவமனை கூட்டரங்கிற்கு வருகை தரும் முதல்வர், ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
அங்கு சுமார் 25 குழந்தைகளுக்கு அவரே நேரடியாக தங்க மோதிரங்களை அணிவிக்கிறார். தொடர்ந்து, பிரசவ வார்டிற்குள் நேரில் சென்று, அன்றைய தினத்தில் பிறந்த பிற குழந்தைகளுக்கும் மோதிரங்களை வழங்கி வாழ்த்துகிறார்.