தமிழக வெற்றிக் கழக தலைவரும், முதலமைச்சருமான விஜய் கடந்த ஆண்டு (2025) செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் வரை காயமடைந்தனர். இச்சம்பவம் இந்தியா முழுவதும் எதிரொலித்தது. இந்த சம்பவம் நடைபெற்று நாளை 27 ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி சி.பி.ஐ விசாரித்து வருகிறது.
கரூரில் முகாமிட்டுள்ள சி.பி.ஐ அதிகாரிகள், சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், அப்பகுதியில் கடை வைத்துள்ளவர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், டாக்டர்கள், போலீசார், பொதுமக்கள் என்று பல்வேறு தரப்பினரிடம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில் காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த த.வெ.க பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார், தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, த.வெ.க கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரும் கரூர் சி.பி.ஐ அலுவலகத்திலும், தொடர்ந்து டெல்லி சி.பி.ஐ அலுவலகத்திலும் ஆஜராகினர். இவர்களை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரும் டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.