மலையக பிரதேசங்களில் உள்ள இந்து கோயில்களை பதிவு செய்யும் பணிகளை துரிதப்படுத்தவும், அதற்கான வசதிகளை வழங்கவும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. சர்வமத கலாசாரத்தையும், மரபுரிமைகளையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று புத்தசாசனம் , மத விவகாரங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (26) வியாழக்கிழமை நடைபெற்ற அமர்வின் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, தோட்டப் பிரதேசங்களில் அமைந்துள்ள கோயில்களைப் பதிவு செய்வதில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பின் எஸ். இராதாகிருஸ்ணன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கோயில்களைப் பதிவு செய்யும்போது காணி உரிமையை அத்தாட்சிப்படுத்துவது அவசியமானது.தோட்டப் பிரதேசங்களில் அமைந்துள்ள கோயில்களைப் பதிவு செய்யும்போது, தோட்ட நிருவாகத்தின் அங்கீகாரம் கோரப்படுவதோடு, சில சந்தர்ப்பங்களில் அதற்கான சிபாரிசுகள் வழங்கப்படாமை காரணமாக கோயில்களைப் பதிவு செய்ய முடியாதுள்ளது. தோட்டப் பிரதேசங்களில் அமைந்துள்ள கோயில்களைப் பதிவு செய்யும்போது, கிராம அலுவலர்களினாலும் காணி நிர்ணயம் தொடர்பான பரிந்துரை வழங்கப்படுவதில்லை. இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக எடுக்கவிருக்கும் நடவடிக்கை என்னவென்று பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சுனில் செனவி,
இந்து மத மற்றும் கலாச்சார திணைக்களம் கோயில்களை பதிவு செய்தல் மற்றும் அது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்களை கொண்டுள்ளது. இதில் காணி உரிமை தொடர்பில் சாட்சியோ அல்லது அந்த காணி உரிமையாளரிள் விருப்பம் இல்லாமை காரணமாக கோயில் அமைந்துள்ள இடத்தில் சட்டப்பூர்வ தன்மையை உறுதிப்படுத்தல்,பதிவு செய்யும் பணிகளை முழுமைப்படுத்தல் மற்றும் அதற்கான தொடர் பாதுகாப்பை வழங்குவது கடினமாகும். குறிப்பாக அரச உதவிகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்காக வசதிகளை வழங்கும் போது பிரச்சினையில்லாத காணி அவசியமாகும்.
மலையகத்தில் இந்து கோயில்களை பதிவு செய்யும் போது நாட்டில் சகல பகுதிகளிலும் உள்ள இந்து கோயில்களை பதிவு செய்வதற்கான ஐந்தாவது பிரிவில் காணி உரிமை தொடர்பான தொடர்பான விடயம் உள்ளது. அதன் காணி உரிமையை உறுதிப்படுத்த அதற்கான ஆவண சாட்சி எமக்கு அவசியமாகும்.தோட்டப் பிரதேசங்களில் அமைந்துள்ள கோயில்களைப் பதிவு செய்யும்போது,தோட்ட நிருவாகத்தின் அங்கீகாரம் கோரப்படுவதோடு, சில சந்தர்ப்பங்களில் அதற்கான சிபாரிசுகள் வழங்கப்படாமை தொடர்பில் எங்களுக்கு தகவல்கள் கிடைக்கின்றன.
தனியார் தோட்டம் மற்றும் தோட்ட நிர்வாகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கோயில்கள் இருக்கும் போது அவற்றை பதிவு செய்யும் போது அந்த தோட்டங்களின் விருப்பத்தை கோருவது அவசியமாகும். இந்த விடயம் தொடர்பில் அந்த தோட்ட நிர்வாகங்களுடன் கலந்துரையாடி அதனை தீர்த்துக்கொள்ள வேண்டும்.
தோட்டப் பிரதேசங்களில் அமைந்துள்ள கோயில்களைப் பதிவு செய்யும்போது,கிராம அலுவலர்களினாலும் காணி நிர்ணயம் தொடர்பான பரிந்துரை வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகின்ற போதும் அவ்வாறு பரிந்துரை வழங்காமல் இருப்பதில்லை. பரிந்துரை வழங்காவிட்டால் அது தொடர்பில் அறியத்தந்தால் அது தொடர்பில் ஆராய முடியும்.எவ்வாறாயினும் மலையக பிரதேசங்களில் உள்ள இந்து கோயில்களை பதிவு செய்யும் பணிகளை துரிதப்படுத்தவும்,அதற்கான வசதிகளை வழங்கவும் விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றோம் என்றார்.