கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் முன்னைய அரசியல்வாதிகள் முயற்சி எடுத்திருந்தால் இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்க முடியும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்று (19) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் காணாமல்போன ஆட்களை பதிவு செய்யும் அலுவலகமான ஓ.எம்.பி. அலுவலகத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கிராம மட்டங்களில் சேவையாற்றுகின்ற அமைப்புகளின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பேசிய அமைச்சர்,
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு, மக்கள் நலன் சார்ந்த சட்டமொன்றைக் கொண்டுவருவோம். அந்தச் சட்டம் உண்மையாகவே பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகவே கொண்டுவரப்படுகிறதே தவிர, தனிநபர்களையோ அல்லது வேறு தரப்பினரையோ ஒடுக்குவதற்காக அல்ல. இன்னும் இரண்டு மாத காலத்துக்குள் அதனை சமர்ப்பிப்போம்.
கடந்த காலங்களில் காணாமல் போனவர்கள் விடயத்தில் அரசியல்வாதிகள் முயற்சி எடுத்திருந்தால் இதற்கான தீர்வினை கண்டிருக்க முடியும். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் சகவாழ்வு, நல்லிணக்கம். ஒற்றுமை என்பவற்றை அமைப்பதற்கு முடியாமல் போயிருக்கிறது.
கோட்டாபய ராஜபக்ஷ சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றிருந்ததாக தெரிவித்து வந்தாரே தவிர, இந்த அலுவலகங்களை செயற்படுத்த விடவில்லை. குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்களின் அழுத்தங்கள் காரணமாகவே இந்த அலுவலகங்கள் பேரளவில் ஆரம்பிக்கப்பட்டன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன், பாராளுமன்ற உறுப்பினர்களான திலகநாதன் இளங்குமரன் மற்றும் அமைச்சின் செயலாளர், காணாமல்போன ஆட்களை பதிவு செய்யும் அலுவலகத்தின் தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.