டொராண்டோ நகரின் வடமேற்கு பகுதியில் உள்ள சந்து (Laneway) ஒன்றிற்குள் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆடவர் ஒருவரின் மரணம் சந்தேகத்திற்கிடமான ஒன்றாகக் கருதப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினரின் தகவல்படி, எக்லிண்டன் அவென்யூ (Eglinton Avenue) மற்றும் கீல் வீதிக்கு (Keele Street) அருகிலுள்ள பகுதியில் ஏற்பட்ட மருத்துவ அவசரநிலை குறித்த அழைப்பொன்றை அடுத்து, அவசரக்கால மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
அங்குள்ள ஒரு சந்திற்குள் மயங்கிய நிலையில் கிடந்த ஆடவர் ஒருவரை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர். அவருக்கு உடனடியாக உயிர்காக்கும் முதலுதவி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக சிபி24 (CP24) ஊடகத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அவர் தீவிர காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.
“தற்போதைய நிலையில் இந்த மரணம் சந்தேகத்திற்கிடமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அதிகாரிகள் சம்பவ இடத்தை இன்னும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். எனினும், மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் முடிவுகளுக்காகக் காத்திருக்கிறோம்” என்று டொராண்டோ காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.