இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞரான சிவராஜா அனோஜன் என்பவருக்கு இஸ்லாம் மத நிந்தனை செய்தார் எனும் குற்றச் சாட்டில் சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
மனிதநேய அடிப்படையில் மேற்படி மரண தண்டனையிலிருந்து அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதே எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் கோரிக்கையும் நிலைப்பாடுமாகும்.
மத நிந்தனை என்பதற்காக ஒரு மனிதனின் அதுவும் மற்றொரு நாட்டைச் சேர்ந்த ஒருவரின் உயிரைப் பறிப்பது என்பது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். எனவே எமது நாட்டைச் சேர்ந்த சிவராஜா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையிலிருந்து மனிதநேய அடிப்படையில் அவருக்கு மன்னிப்பும் விடுதலையும் வழங்கப்பட வேண்டும் என்பதை எமது கட்சி வலியுறுத்துகிறது.
மேலும் அவ் அறிக்கையில், சிவராசா அனோஜன் தொழில் வாய்ப்பிற்காக சவூதி சென்றவர். அங்கிருந்து அவர் பதிவிட்ட இஸ்லாம் மத நிந்தனை இழிவு படுத்தல் அல்லது அவதூறு எதுவானாலும் அவை எக்காரணத்தாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவைகள் அல்ல. அதே போன்று இந்து மத நிந்தனையோ இழிவு படுத்தல்களோ அல்லது வேற்று மத வெறுப்புக்களோ ஏற்றுக் கொள்ளத் தக்கனவல்ல. அதே வேளை இவை தற் செயலானவைகளும் அல்ல. அவற்றின் ஊற்றுமூலம் இலங்கை வரலாற்றில்
குறிப்பாகக் கொலனிய ஆட்சிக் காலத்திலிருந்தே இலங்கை மக்களிடையே திட்டமிட்ட வழிகளில் இன மத மொழி பிரதேச வேறுபாட்டு வக்கிரங்களாகவும் வசைச் செயல்களாகவும் குறுகிய சமூக பண்பாட்டு நடைமுறைகளாகவும் வளர்க்கப்பட்டு வந்தவற்றின் தீய எதிர்விளைவுகளின் மோசமான வெளிப்பாடுகளில் ஒன்றாகவே இவ் விடயத்தையும் காண வேண்டியுள்ளது. “விளைவுகளுக்கு எதிராகப் போராடும் அதே வேளை காரணங்களுக்காகவும் போராட வேண்டும்” எனும் சமூக விஞ்ஞானக் கூற்று இவ் வேளை நினைவு படுத்தப்படவேண்டிய ஒன்றாகும்.
மேலும் அனோஜன் விடயத்தில் வாக்கு வங்கிக்கும் பதவிகளுக்குமான அரசியலும் தமிழ் முஸ்லிம் உறவுக்கு வேட்டு வைக்கும் அரசியலும் ஓடிக் கொண்டிருப்பதையும் காணமுடிகிறது. ஆதலால் இவை அனைத்துக்கும் அப்பால் ஒரு முகப்பட்ட வற்புறுத்தலுக்குரிய விடயம் அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும். இதனை எமது கட்சி வலியுறுத்துகிறது.
சி.கா.செந்திவேல்
பொதுச் செயலாளர்