தமிழ் மக்களின் விடுதலை அபிலாசைகளை நனவாக்கும் முயற்சிகளில், தெற்கின் ஜனநாயக சக்திகள் மற்றும் உழைக்கும் வர்க்க இயக்கங்களுடன் இணைந்து தொடர்ந்து செயற்பட்ட வடக்கின் சிறந்த பிரதிநிதியாக எம்.கே. சிவாஜிலிங்கம் திகழ்ந்தார் என நவ சம சமாஜக் கட்சி (NSSP) மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி (USP) ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளன.
அரச வன்முறை மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான பிரச்சாரங்களின் முன்னணியில் அவர் எப்போதும் நின்றதாக அக்கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.
தெற்கின் ஜனநாயக சக்திகள் முன்னெடுத்த இயக்கங்களில் அவர் வடக்கின் ஒரு பரிபூரணப் பங்காளியாகவே தன்னை வெளிப்படுத்தினார் எனக் குறிப்பிட்டுள்ள அவ்வறிக்கை, நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் எதிர்காலம் வடக்கின் சக்திகள் தெற்கின் ஜனநாயக இயக்கங்களுடன் கைகோர்ப்பதிலேயே தங்கியுள்ளது என்பதை அவர் உணர்த்தியதாகத் தெரிவித்துள்ளது.
யுத்தத்திற்குப் பின்னர் எழுந்த மிக முக்கியமான பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு கோரி கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் அவர் தோளோடு தோள் நின்றதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களின் கதி, முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த பொதுமக்களின் மீள்குடியேற்றம், இராணுவமயமாக்கலை முடிவுக்குக் கொண்டுவந்து குடிசார் நிர்வாகத்தை மீள நிறுவுதல் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள், குழந்தைகளின் துயரங்களுக்குத் தீர்வு காண்பது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் அவர் முக்கிய பங்காற்றினார்.
இப்போராட்டங்களின் போது பாதுகாப்புத் தரப்பினர் தெற்கிலிருந்து சென்ற செயற்பாட்டாளர்களை “வெளியாட்கள்” என முத்திரை குத்திப் போராட்டங்களைக் கலைக்க முற்பட்ட வேளைகளில், சிவாஜிலிங்கம் ஒரு பெருமலை போன்று நிமிர்ந்து நின்று அரச அதிகாரிகளை எதிர்த்ததாகவும், நாட்டின் எந்தப் பகுதியிலும் சென்று போராடுவதற்கும் கருத்துத் தெரிவிப்பதற்கும் அனைத்துக் குடிமக்களுக்கும் உரிமை உண்டு என்பதைத் துணிச்சலாக நிலைநாட்டியதாகவும் அறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
அவரது தலைமைத்துவம் மிகவும் அவசியமான ஒரு காலகட்டத்தில், குணப்படுத்த முடியாத நோயினால் அவர் உயிரிழந்தமை ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக NSSP மற்றும் USP ஆகியன தெரிவித்துள்ளன.
சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் வேண்டி எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள கடினமான போராட்டங்களில் சிவாஜிலிங்கத்தின் அனுபவங்கள் ஒரு வழிகாட்டும் ஒளியாகத் தொடர்ந்தும் சேவையாற்றும் எனக் குறிப்பிட்டுள்ள அக்கட்சிகள், அன்னாருக்குத் தமது புரட்சிகரமான வீரவணக்கத்தையும் தெரிவித்துக்கொண்டுள்ளன.