சென்னை:
தமிழக அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனமான கைடன்ஸ் தமிழ்நாடு (Guidance TamilNadu) நிறுவனத்தில் இருந்து அதிக அளவிலான ஊழியர்கள் ராஜினாமா செய்ததாகத் தகவல் வெளியான நிலையில், அதனை அந்நிறுவனம் மறுத்துள்ளது.
பணிநீக்கம் குறித்த சர்ச்சை:
தமிழகத் தொழில் துறையின் கீழ் இயங்கும் கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனம், தமிழ்நாட்டிற்குத் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு வரவிருந்த தொழில் முதலீடுகள் தொடர்பான தகவல்கள் ஆந்திர அரசுக்குக் கசிந்ததாகப் புகார் எழுந்ததன் பேரில், கடந்த இரண்டு மாதங்களில் இந்நிறுவனத்தில் இருந்து 15 ஒப்பந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. மேலும், அவர்களில் 3 பேர் உடனடியாக ஆந்திரப் பிரதேச பொருளாதார மேம்பாட்டு வாரியத்தில் பணியில் சேர்ந்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதனிடையே, ஊழியர்கள் யாரும் பணிநீக்கம் செய்யப்படவில்லை என்றும், சிலர் ராஜினாமா செய்ததாகவும் கூறப்பட்டது.
கைடன்ஸ் தமிழ்நாடு விளக்கம்:
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனம் தற்போது அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “கைடன்ஸ் தமிழ்நாடு ஊழியர்கள் ஜூலை மாதம் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ததாக ஊடகத்தில் வெளியாகி வரும் செய்தி முற்றிலும் முரணானது. ஊழியர்கள் வெளியேறுவது என்பது ஒரு நிறுவனத்தில் இயல்பாக நடக்கின்ற நிகழ்வாகும். சிறந்த வேலைவாய்ப்பு, உயர்கல்வி, இடமாற்றம், குடும்பச் சூழல் எனப் பல்வேறு தனிப்பட்ட காரணங்களால் கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தில் இருந்து சில ஊழியர்கள் விலகுகின்றனர். எங்கள் ஊழியர்களின் தனிப்பட்ட தொழில்முறை விருப்பங்களுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம்,” எனக் கூறப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்களின் முதன்மைத் தேர்வு:
தொடர்ந்து அந்த அறிக்கையில், “முதலீடுகளை ஈர்ப்பதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் அண்டை மாநிலங்களுடன் ஆரோக்கியமான மற்றும் ஆக்கப்பூர்வமான முறையில் தமிழகம் போட்டியிட்டு வருகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குத் தமிழகம் பங்களிக்கிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதன்மைத் தேர்வாகத் தமிழகம் தொடர்கிறது,” என கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனம் தெரிவித்துள்ளது.
#GuidanceTN #TamilNaduInvestments #TVKGovernment #Industries #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive