தமது சொந்தக் காணிகளிலேயே சிறுபோக நெற்செய்கையை மேற்கொள்வதற்கு அனுமதியைப் பெற்றுத்தருமாறு கல்மடுக்குளத்தின் சிறுபோக நீர்ப்பாசன பங்காளர்களான விசுவமடு மேற்கு கமக்கார அமைப்பு பிரிவிலுள்ள, நெத்தலியாறு விவசாயிகள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையைக் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் உரியதரப்பினரிடம் கலந்துரையாடி நெத்தலியாறு விவசாயிகள் எதிர்நோக்கும் நெருக்கடியைத் தீர்ப்பது தொடர்பில் கவனஞ்செலுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
விசுவமடு மேற்கு, நெத்தலியாறு விவசாயிகளின் அழைப்பையேற்று வெள்ளிக்கிழமை (17) குறித்தபகுதிக்கு நேரடியாகச்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் விவசாயிகளுடன் கலந்துரையாடியதுடன், நெத்தலியாறுப்பகுதி விவசாய நிலங்களையும் நேரடியாகப் பார்வையிட்டிருந்தார்.
மேலும் விசுவமடு மேற்கு கமக்கார அமைப்பைச்சார்ந்த விவசாயிகள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் தமது முறைப்பாடுகளையும், கோரிக்கைகளையும் தெரிவிக்கையில்,
கல்மடுக்குளம் முல்லைத்தீவுமாவட்ட எல்லைக்குள் காணப்படுகின்றபோதும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சார்ந்தவர்களே அக்குளத்தினால் பயன்பெறுகின்றனர்.
இருப்பினும் கல்மடுக்குளத்தின் நீரைப்பயன்படுத்தி கடந்த 1972ஆம் ஆண்டிலிருந்து விசுவமடு மேற்கு கமக்கார அமைப்பு பிரிவிலுள்ள நெத்தலியாறு பகுதியிலுள்ள வயல் நிலங்களில் சிறுபோக நெற்செய்கையில் நாம் ஈடுபட்டுவருகின்றோம்.
இந்நிலையில் கடந்த 1983ஆம்ஆண்டு கண்டாவளைப்பகுதியிலுள்ள வயல்நிலங்களுக்கு கல்மடுக்குளத்திலிருந்து நீர்ப்பாசனம் வழங்கத் தொடங்கிய பிற்பாடு, நெத்தலியாறு பகுதியில் நாம் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்கு கண்டாவளை கமக்கார அமைப்பினரால் எமக்கு தொடர்ச்சியாக பல்வேறு தடைகளும், இடையூறுகளும் ஏற்படுத்தப்பட்டுவந்தன.
இவ்வாறு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டபோதும் கடந்த 2019ஆம் ஆண்டுவரையில் கல்மடுக்குளத்தின் நீரைப் பயன்படுத்தி நெத்தலியாறு பகுதியில் நாம் சிறுபோக நெற்செய்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவந்தோம்.
இத்தகைய சூழலில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டாவளை கமக்கார அமைப்பினர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்ததன் பிற்பாடு எம்மால் சிறுபோக நெற்செய்கைக்கு கல்மடுக்குளத்திலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளமுடியாதநிலை ஏற்பட்டதுடன், சிறுபோக நெற்செய்கையை மேற்கொள்ளமுடியாத துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட்டது.
அதன்பிற்பாடு எமது தொடர்ச்சியான கோரிக்கையினையடுத்து, வாழ்வாதாரப் பங்குகள் என்ற அடிப்படையில் ஒரு பயனாளிக்கு 0.25ஏக்கர் சிறுபோக பங்கு வீதம், மொத்தம் 35ஏக்கர் சிறுபோக பங்குகளுக்கு கல்மடுக்குளத்திலிருந்து நீரைப்பெற்று நெற்செய்கை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டது.
அத்தோடு அருகிலுள்ள கல்மடுக்குளம் கமக்கார அமைப்பு பிரிவிற்குட்பட்ட வயல்காணிகளில் அந்த சிறுபோக வாழ்வாதாரப் பங்குகள் பகிர்ந்தளிக்கப்பட்டதுடன், அங்கு பலத்த இடர்பாடுகளுக்கு மத்தியில் சிறுபோக நெற்செய்கையில் ஈடுபட்டுவந்தோம்.
இந்நிலையில் 2026ஆம் ஆண்டிற்கான சிறுபோக நெற்செய்கைக்கான பங்குகளை கிளிநொச்சி – புளியம்பொக்கணை கமக்கார அமைப்பு பிரிவிற்குட்பட்ட வயல்காண்களில் எமக்கு பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிவித்தல் வழங்கப்பட்டது.
இத்தகையசூழலில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளருடைய கோரிக்கைக்கு அமைவாக எமக்கு வழங்கப்பட்ட 35ஏக்கர் வாழ்வாதார சிறுபோகப்பங்குகள் 70ஏக்கர் பங்குகளாக இரட்டிப்புச் செய்யப்பட்டு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அத்தோடு புளியம்பொக்கணையில் நெத்தலியாறு விவசாயிகளுக்குரிய பங்குகளை தனியாக ஒரே பகுதியாக வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கெள்ளப்பட்டது.
குறித்த புளியம்பொக்கணை வயல்நிலங்கள் நெத்தலியாறு பகுதியிலிருந்து நீண்ட தூரத்தில் இருந்தாலும், எமது பங்குகள் தனியாக ஒரேபகுதியாக வழங்கப்படுவதற்கும், பங்குகள் இரட்டிப்புச் செய்யப்படுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதால் நாம் புளியம் பொக்கணையில் நெற்செய்தை மேற்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்தோம்.
இந்நிலையில் புளியம்பொக்கணை கமக்கார அமைப்பினருக்கான சிறுபோக கூட்டத்திலும் இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டதுடன், புளியம்பொக்கணை கமக்கார அமைப்பினரும் தமது வயல்காணிகளில் நெத்தலியாறு விவசாயிகளின் சிறுபோக வாழ்வாதாரப் பங்குகளை தனியாக ஒரே பகுதியாக பகிர்ந்தளிப்பதற்கு இணக்கம் தெரிவித்திருந்தனர்.
அதனைத்தொடர்ந்து சிறுபோகத்திற்காக எமக்கு தனியாக ஒரேபகுதியாக ஒதுக்கப்பட்ட வயல் காணிகளை, புளியம் பொக்கணை கமக்கார அமைப்பினர் நேரடியாக அழைத்துச்சென்று காண்பித்துமிருந்தனர்.
இதனையடுத்து எமக்காக ஒதுக்கப்பட்ட வயல்நிலங்களில் பயிர்ச்செய்கைக்கான தயார்ப்படுத்தல் வேலைகளைச் செய்வதற்காகச் சென்றபோது, அந்தக்காணிகளில் நெத்தலியாறு விவசாயிகள் ஒரேபகுதியாகத் தனியாக நெற்செய்கை மேற்கொள்வதற்கு அனுமதிக்க முடியாதென இதன்போது புளியம்பொக்கணை விவசாயிகள் தடுத்ததுடன், தாமும் அந்தப்பகுதிக்குள் நெற்செய்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அவ்வாறு புளியம்பொக்கணை விவசாயிகளும், நாமும் இணைந்து ஒரேபகுதிக்குள் நெற்செய்கை மேற்கொண்டால் நீர்ப்பாசனம் மேற்கொள்வதில் சிக்கல் நிலைகள் ஏற்பட வாய்ப்புக்ளுள்ளன. பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்கவேண்டியநிலை ஏற்படுவதுடன், முரண்பாடுகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களுமுள்ளன. எனவே புளியம்பொக்கணையில் நாம் நெற்செய்கை மேற்கொள்வதை விரும்பவில்லை.
எனவே கல்மடுக்குளத்திலிருந்து நீரைப்பெற்று விசுவமடு மேற்கு கமக்கார அமைப்புபிரிவில் நெத்தலியாறு பகுதியிலுள்ள தமது சொந்த வயல் நிலங்களில் அனுமதிக்கப்பட்ட 70ஏக்கர் சிறு போக நெற்செய்கை மேற்கொள்வதற்குரிய அனுமதியைப் பெற்றுத்தருமாறு விசுவமடு நெத்தலியாறுபகுதி விவசாயிதளால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் தோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இதுதொடர்பில் கமக்கார அமைப்பினரிடமிருந்து எழுத்துமூலமான கோரிக்கைக்கடிதமொன்றினை கையளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அத்தோடு இவ்விடயம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி இந்த விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.