பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், பொலிஸாரிடம் சிக்காமல் இருக்க கடலில் குதித்த நிலையில், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த ஒரு இழுவைப்படகில் (Multi-day trawler) போதைப்பொருள் வியாபாரம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், பேருவளை பொலிஸார் அந்தப் படகைச் சோதனையிட்டனர்.
இதன்போது, படகிலிருந்த சந்தேக நபர் பொலிஸாரிடமிருந்து தப்பிக்க ஏனைய மீன்பிடி படகுகள் வழியாக ஓடிச் சென்று கடலில் குதித்துள்ளார்.
கடலில் குதித்த நபரைத் தேடி பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்த போதிலும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இன்று (18) பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அந்த நபரின் உடல் மிதப்பதைப் பேருவளை கடற்படை கடலோர பாதுகாப்பு பிரிவினர் கண்டெடுத்துள்ளனர்.
உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.