சென்னை:
தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஆண் பணியாளர்களுக்கும் முதன்முறையாக 15 நாட்கள் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு (Paternity Leave) வழங்கி முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
முதன்முறையாகத் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு:
தமிழ்நாடு அரசில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், ஆண் பணியாளர்களுக்கும் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு வழங்கப் பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசுப் பணியாளர்களிடமிருந்து அரசுக்கு வரப்பெற்றது. இதனைப் பரிசீலித்த தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் முதன்முறையாகத் தந்தையர் மகப்பேறுகால விடுப்பை அறிவித்து அதற்கான ஆணையை முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார்.
அரசாணையில் உள்ள முக்கிய அம்சங்கள்:
அந்த ஆணையில், “குழந்தை பிறக்கும் காலகட்டம் என்பது தாய் மற்றும் குழந்தைக்கு மிகவும் முக்கியமானதாகும். இக்காலகட்டத்தில் தாய்க்கு உடல் மற்றும் மனரீதியான ஆதரவு வழங்குவதுடன், குழந்தை பராமரிப்பிலும் தந்தையின் பங்களிப்பு அவசியமாகிறது. பெண் அரசுப் பணியாளர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுவது தாய்மை மற்றும் குழந்தை நலனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. அதேபோன்று, ஆண் அரசுப் பணியாளர்களுக்கும் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு வழங்கப்படுவது குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும், குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் உதவும். எனவே, இக்கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, திருமணமான ஆண் அரசுப் பணியாளர்களுக்கு, அவர்தம் மனைவியின் மகப்பேறு காலத்தில் உடனிருக்க ஏதுவாக 15 நாட்கள் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவ்விடுப்பினைக் குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தோ அல்லது குழந்தை பிறந்த தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள்ளாகவோ எடுத்துக்கொள்ளலாம்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்மார்களுக்கான மகப்பேறு விடுப்பு திருத்தம்:
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெண்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டாலும், முதல் 2 குழந்தைகளுக்கு மட்டுமே அது பொருந்தும் என்ற சூழல் இருந்தது. 3-வது குழந்தை பெற்றுக்கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு 9 மாதங்கள் மட்டுமே விடுப்பு அளிக்கப்பட்டு வந்தது. இதனைத் திருத்துமாறு அரசு ஊழியர்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 18 அன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில், 3-வது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண் அரசு ஊழியர்களுக்கும் 12 மாதங்கள் (ஓராண்டு) விடுப்பு வழங்கப்படும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமார் அறிவித்திருந்தார். தற்போது அரசு ஊழியர்களாக இருக்கும் தந்தைகளுக்கும் மகப்பேறுகால விடுப்பைத் தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
#CMVijay #PaternityLeave #TNGovernment #GovernmentEmployees #TamilNadu #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive