சீனா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் (EU), வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட பல முக்கிய வர்த்தகக் கூட்டாளிகளை இலக்கு வைத்து அமெரிக்கா அறிவித்துள்ள புதிய சுற்று வரி விதிப்பு நடவடிக்கைகளிலிருந்து இலங்கை விலக்களிக்கப்பட்டுள்ளது.
14 பொருளாதார நாடுகளின் வர்த்தக நடைமுறைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையினால் அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய வரிகள், அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளிகள் சிலரைப் பாதிக்கவுள்ளன. இந்த வரி விகிதங்கள் 20 சதவீதம் முதல் அதிகபட்சமாக 40 சதவீதம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இதில் சீனா அதிகபட்சமாக 40 சதவீதம் வரையிலான வரியையும், அதனைத் தொடர்ந்து வியட்நாம் 35 சதவீதம் வரையிலான வரியையும் எதிர்கொள்கின்றன. ஏனைய பாதிக்கப்பட்ட நாடுகள் 20 சதவீதம் அல்லது 25 சதவீத வரி விகிதங்களை எதிர்கொள்கின்றன. எவ்வாறாயினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இணக்கம் தெரிவித்துள்ள வரி உச்சவரம்புகள் காரணமாக, சில நாடுகளுக்கான நடைமுறை வரி விகிதங்கள் குறைவாகவே இருக்கும்.
சீனா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா, தாய்லாந்து, தென் கொரியா, வியட்நாம், தாய்வான், பங்களாதேஷ் மற்றும் ஜப்பான் ஆகிய 14 பொருளாதாரங்களே இந்த விசாரணைகளின் கீழ் உள்ளடக்கப்பட்டிருந்தன. பெயரிடப்பட்ட இந்தப் பட்டியலில் இலங்கை இடம்பெறவில்லை.
ட்ரம்ப் முன்னர் அறிவித்திருந்த ‘விடுதலை நாள்’ (Liberation Day) வரிகள் சட்டவிரோதமானவை என அமெரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, நிர்வாகம் மாற்று வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில் இந்தப் புதிய நகர்வு இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டு அரசாங்கங்களின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் அமெரிக்க வணிகங்கள், தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு நியாயமற்ற முறையில் பாதகத்தை ஏற்படுத்துகின்றனவா என்பதை ஆராயும் அமெரிக்க வர்த்தகச் சட்டத்தின் 301-ஆவது பிரிவின் கீழ், கடந்த மார்ச் மாதம் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இவை உதவும் என வாதிட்டு, ட்ரம்ப் தனது வர்த்தகக் கொள்கையின் முக்கிய அம்சமாக வரிகளைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வருகிறார். எவ்வாறாயினும், இறக்குமதி வரிகள் நுகர்வோர் பொருட்களின் விலைகளை உயர்த்துவதுடன், பணவீக்கத்தைத் தூண்டி, உலகளாவிய வர்த்தகத்தில் சுமையை ஏற்படுத்தக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.