ஆயுத மோதலின் போது மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு முழுமையான இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் (OHCHR) அழைப்பு விடுத்துள்ளது.
“நான் பலமுறை இறந்துவிட்டேன்: இலங்கையில் மனிதாபிமான உதவிகள் மீதான தாக்குதல்கள், 20 ஆண்டுகளுக்குப் பிறகு” (“I Died Many Times: Attacks on Humanitarian Assistance in Sri Lanka, 20 Years On”) என்ற தலைப்பிலான 40 பக்கங்களைக் கொண்ட புதிய அறிக்கையில், மோதலின் போது இடம்பெற்ற பாரிய சர்வதேச சட்ட மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் பெருமளவில் இல்லாமலேயே உள்ளது என OHCHR தெரிவித்துள்ளது.
குறிப்பாக 2006 மற்றும் 2009 மே மாதங்களுக்கு இடையில் மனிதாபிமானப் பணியாளர்கள், வைத்தியசாலைகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தனிப்பட்ட சம்பவங்களாக அன்றி, ஒரு தொடர்ச்சியான போக்கின் அங்கமாகவே அமைந்திருந்தன என அந்த அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவம், தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) மற்றும் ஏனைய ஆயுதக் குழுக்கள் சம்பந்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து நம்பகத்தன்மையுடன் விசாரணை நடத்தவோ அல்லது வழக்குத் தொடரவோ அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் தவறிவிட்டதாக அது குற்றம் சாட்டியுள்ளது.
இந்த அறிக்கை நான்கு முக்கிய சம்பவங்களை ஆராய்ந்துள்ளது:
2006 ஜனவரியில் தமிழர் புனர்வாழ்வுக் கழக (TRO) பணியாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை.
2006 ஓகஸ்டில் மூதூரில் ‘அக்ஷன் கான்ட்ரே லா ஃபெய்ம்’ (Action Contre la Faim) நிறுவனத்தின் 17 மனிதாபிமானப் பணியாளர்கள் கொல்லப்பட்டமை.
2009 ஜனவரியில் ஐ.நா. மனிதாபிமான உதவித் தொடரணி மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டமையும் தடுக்கப்பட்டமையும்.
2009 ஆம் ஆண்டு புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டமை.
OHCHR இன் கூற்றுப்படி, இந்த நான்கு வழக்குகளிலும் எவரும் இதுவரை குற்றவியல் ரீதியாகப் பொறுப்பேற்க வைக்கப்படவில்லை.
அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினராலும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மனிதாபிமான நடவடிக்கைகளைப் பலவீனப்படுத்தியதுடன் பொதுமக்களின் துன்பங்களை அதிகரித்தன என்பதையும் இந்த அறிக்கை ஏற்றுக்கொண்டுள்ளது.
மோதலின் போது பொதுமக்களைப் போதியளவு பாதுகாக்கத் தவறியமை மற்றும் ஆரம்பகட்ட எச்சரிக்கைகளுக்குப் பதிலளிக்கத் தவறியமை உள்ளிட்ட தனது சொந்த நிறுவன ரீதியான தோல்விகளையும் ஐ.நா. மேலும் ஏற்றுக்கொண்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும் என OHCHR அழைப்பு விடுத்துள்ளது:
பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீடுகளை வழங்க வேண்டும்.
சுயாதீனமான வழக்குத் தொடுநர் பொறிமுறையொன்றை நிறுவ வேண்டும்.
மனிதாபிமான உதவிகள் மீதான தாக்குதல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் ஒரு பரந்த கொள்கை அல்லது திட்டத்தின் அங்கமாக அமைந்திருந்தனவா என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.
போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை உள்நாட்டுச் சட்டத்தில் உள்ளடக்க வேண்டும்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் பிரகடனத்தில் (Rome Statute) இணைய வேண்டும்.
பாதுகாப்புத் துறையை மறுசீரமைக்க வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கான பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் கண்காணிப்புகளை நிறுத்த வேண்டும்.
உள்நாட்டுப் பொறுப்புக்கூறல் முயற்சிகள் போதியளவில் இல்லாத இடங்களில், சர்வதேச விசாரணைகள், வழக்குத் தொடரல்கள், இலக்கு வைக்கப்பட்ட தடைகள் மற்றும் இலங்கைப் பாதுகாப்புப் பணியாளர்களுக்கான மனித உரிமைப் பின்னணிச் சோதனைகளை மேற்கொள்ளவும் இந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
2026 செப்டம்பர் 24 அன்று இலங்கை அரசாங்கத்திடம் 27 கேள்விகளைச் சமர்ப்பித்ததாகவும், அதனைத் தொடர்ந்து நவம்பர் 3 அன்று அறிக்கையின் முன்கூட்டிய பிரதியொன்றைப் பகிர்ந்து கருத்துக்களைக் கோரியதாகவும் OHCHR தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அறிக்கை வெளியிடப்படும் வரை அரசாங்கத்திடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை என அது குறிப்பிட்டுள்ளது.