சூர்யா நடித்துள்ள ‘சீன்’ திரைப்படம் வெளியானது. இதில் நஸ்ரியா, நஸ்லென் உள்பட பலர் நடித்துள்ளனர். இதன் புரமோஷனில், ‘3 அல்லது 4-வது முயற்சிக்குப் பிறகே நஸ்ரியா என்னுடன் நடிக்கச் சம்மதித்தார். 12 ஆண்டுகளாகத் தமிழில் எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்ளாமல் இருந்த அவர், இறுதியில் எங்கள் படத்தில் நடிக்கச் சம்மதித்ததற்கு நன்றி” என்று சூர்யா கூறியிருந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள நஸ்ரியா, “சூர்யா சார் அப்படிச் சொன்னது வெறும் நகைச்சுவைக்காகத்தான். உண்மையில் கால்ஷீட் பிரச்சினை மற்றும் சில குழப்பங்கள் காரணமாகவே நடிக்க முடியாமல் போனது. சூர்யாவின் திரைப்படத்தை நான் எப்படி வேண்டுமென்றே நிராகரிக்க முடியும்?
12 ஆண்டுகளாகத் தமிழில் நடிக்காததற்குத் தனிப்பட்ட காரணம் ஏதுமில்லை. சரியான கதை மற்றும் கதாபாத்திரம் எனக்கு அமையாததால்தான் நடிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார். நஸ்ரியா, தமிழில் கடைசியாக ‘திருமணம் எனும் நிக்காஹ்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தைத் தரும் ‘ஜான் டோ’ திரைப்படம் – சஞ்சனா நடராஜன்
அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா உள்பட பலர் நடித்துள்ள ‘ஜான் டோ’ திரைப்படம் நவ.13-ல் வெளியாக இருக்கிறது. மதுமிதா இயக்கியுள்ள இப்படத்துக்கு பிரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார். அர்கா மீடியா வொர்க்ஸ் சார்பில் ஷோபு யார்லகட்டா, பிரசாத் தேவினேனி தயாரித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நடிகை சஞ்சனா நடராஜன் கூறும்போது, ‘‘அர்ஜுன் தாஸுடன் நான் நடிக்கும் 2-வது படம் இது. இதில் நாங்கள் போலீஸ் அதிகாரிகளாக நடித்திருப்பது மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. அர்ஜுன் தாஸ் படப்பிடிப்புத் தளத்தில் ஜாலியாகவும் கலகலப்பாகவும் இருப்பார். அவருடன் சீரியஸான காட்சிகளில் நடிப்பது கூட சில நேரங்களில் சவாலாக இருக்கும்.
அவருடன் மீண்டும் பணியாற்றியது சிறப்பான அனுபவம். இந்தப் படத்துக்காக சுமார் 35 நாட்கள் தொடர்ந்து பணியாற்றினேன். இதுவரை பணியாற்றிய குழுக்களில் மிகவும் திட்டமிட்டும் நேரத்தை வீணாக்காமலும் திறமையாகவும் பணியாற்றிய குழு இதுதான்.
தினமும் படப்பிடிப்புக்குச் செல்வதே உற்சாகமாக இருக்கும். குறிப்பாக, படக்குழுவில் நிறைய பெண்கள் இருந்தது கூடுதல் மகிழ்ச்சி. சென்டிமென்ட் கலந்த சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் இது. படத்தைப் பார்த்தவர்கள் நன்றாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இப்படம் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தைத் தரும்” என்றார்.