தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக நடித்து வெளியான ‘கட்டா குஸ்தி 2 ‘ திரைப்படம் – இந்திய மதிப்பில் 30 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, வசூல் சாதனையை படைத்திருப்பதால்… மகிழ்ச்சி அடைந்த அப்படத்தின் தயாரிப்பாளரான டொக்டர் ஐசரி கே. கணேஷ், விஷ்ணு விஷாலுக்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.
இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான ‘கட்டா குஸ்தி 2 ‘ திரைப்படம் – கடந்த மூன்றாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியானது. நகைச்சுவையுடன் கூடிய குடும்ப பொழுதுபோக்கு படமாக வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களின் பேராதரவு தொடர்ந்து கிடைத்து வருகிறது. மேலும் இப்படம் வெளியான மூன்று நாட்களில் இந்திய மதிப்பில் 22 கோடி வசூல் செய்து சாதனையும் படைத்தது.
இதனைத் தொடர்ந்து படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவை சென்னையில் படக்குழுவினர் ஒருங்கிணைத்திருந்தனர்.
இந்நிகழ்வில் படத்தை வெற்றி பெறச் செய்த இயக்குநருக்கு தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் பத்து சவரன் தங்க நகையை பரிசாக வழங்கினார். அத்துடன் படத்தில் பணியாற்றிய நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நாற்பது கிராம் மதிப்புள்ள வெள்ளி நாணயங்களையும் பரிசாக வழங்கினர் இதன் முத்தாய்ப்பாக படத்தின் நாயகனான விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் டொக்டர் ஐசரி கே. கணேஷ் சொகுசு கார் ஒன்றை பரிசளித்தார்.
இந்நிகழ்வில் இயக்குநர் செல்லா அய்யாவு பேசுகையில், ” இப்படத்திற்காக இயக்குநர் உள்ளிட்ட தொழில்நுட்ப குழுவினர் பணியாற்றியதை விட.. கதையின் நாயகனான விஷ்ணு விஷால் நாளாந்தம் இரவு இரண்டு மணிக்கும் மேல் பணியாற்றியதே வெற்றிக்கு காரணம். இப்படத்தின் வெற்றிக்காக ஒன்றிணைந்து பாடுபட்ட நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.