சென்னை:
தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தனக்கு ஆட்சேபனைக்குரிய குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ள விவகாரத்தில், எம்.எல்.ஏ-வை உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மு.க.ஸ்டாலின் கண்டனம்:
இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “4 மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது முதலமைச்சருக்குத் தெரியுமா, தெரியாதா? தேசிய மகளிர் ஆணையமும், உயர் நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர்தான் ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே பதியப்படும் என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா? ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ மற்றும் போதை மாத்திரை விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் மீது உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் மற்றவர்களுக்குப் பயம் இருந்திருக்கும். 4 மாதகாலமாகக் குற்றவாளியைப் பாதுகாக்க முயன்ற மாநில அரசு தாமாகவே இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ-வைக் கைது செய்வதுடன், நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைத்த தலைமைச் செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் தந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி அறிக்கை:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல்வேறு அழுத்தங்களுக்கு நடுவே தனக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிராகக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திடமனதுடன் புகாரைப் பதிவு செய்துள்ளார். அதிமுக சார்பாக வழக்குத் தொடர்ந்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே இப்போது புகார் அளிக்கப்பட்ட செய்தி வருகிறது. அகில இந்திய சேவை அதிகாரிகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு முதலமைச்சருடையது. இன்றைய தினமே வழக்குப் பதியப்பட்டு கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ கைது செய்யப்பட வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்; இதனை மறைக்க முயன்ற அதிகார மையங்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியருக்கு நீதி நிலைநாட்டப்பட அதிமுக துணை நிற்கும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மாணிக்கம் தாகூர் கோரிக்கை:
தவெக கூட்டணியில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள பதிவில், “பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தாமதமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பொறுப்பில் இருக்கும் பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கக் கூடாது. மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க அரசு உடனடியாகத் தலையிட வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.
#KallakurichiMLA #ArulVignesh #MKStalin #EdappadiPalaniswami #ManickamTagore #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive