தமிழீழ தேசியக் கொடி நாளை முன்னிட்டு, கனடாவின் Brampton நகரிலுள்ள Ken Whillans Square சதுக்கத்தில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்வில் பிராம்ப்டன் நகர மேயர் Patrick Brown தமிழ் சமூகத்தினருடன் இணைந்து கலந்துகொண்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வு குறித்துத் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள மேயர் Patrick Brown பல தமிழ் குடும்பங்களுக்கு இந்நாள் தமது வரலாற்றை நினைவுகூர்வதற்கும் அதனைத் தமது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் பகிர்ந்துகொள்வதற்குமான ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிராம்ப்டனில் அமைக்கப்பட்டுள்ள ‘தமிழினப் படுகொலை நினைவுத்தூபி’ (Tamil Genocide Monument) தமிழ் குடும்பங்கள் தமது அன்புக்குரியவர்களை நினைவுகூர்வதற்கான இடமாகவும், அக்குடும்பங்கள் கடந்துவந்த துயரங்களை ஏனையோர் அறிந்துகொள்வதற்கான ஒரு மையமாகவும் திகழ்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வை ஒருங்கிணைத்து அனைவரையும் ஒன்றிணைத்த ‘உலகளாவிய தமிழ் உரிமைகளுக்கான குரல்’ அமைப்பிற்கு நன்றி தெரிவித்துள்ள மேயர், உள்ளூர் வணிகங்களை நடத்துவது முதல் தன்னார்வத் தொண்டுகள் செய்வது மற்றும் புதிதாக நாட்டிற்கு வருபவர்கள் குடியேறுவதற்கு உதவுவது வரை, தமிழ் கனேடியர்கள் ஒவ்வொரு நாளும் பிராம்ப்டன் நகரை மேலும் வலுப்படுத்தி வருவதாகப் பாராட்டியுள்ளார்.