சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாவீரர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களை, சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துக் கலந்துரையாடியுள்ளார்.
சாவகச்சேரி நகரப் பகுதியில் மாவீரர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உபதவிசாளர் ஞா. கிஷோரும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றார்.
மாவீரர் தின நிகழ்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படாது எனப் பொலிஸார் தெரிவித்ததாக கிஷோர் ஊடகங்களிடம் கூறினார். தடைசெய்யப்பட்ட சின்னங்களையும் படங்களையும் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்திய பொலிஸார், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படாது என்றும் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் இந்நிகழ்வுகளில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியிருந்ததைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் சுட்டிக்காட்டியதாகவும் கிஷோர் தெரிவித்தார்.