அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கப் போர்ச் செயலாளர் (Secretary of War) பீட் ஹெக்செத் (Pete Hegseth) இரகசிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இது குறித்துத் தமக்கு எந்தவித உத்தியோகபூர்வ அறிவிப்பும் கிடைக்கவில்லை எனவும், இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ நடவடிக்கைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை எனவும் கனடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் இரகசியக் குறிப்பாணை (Secret Memorandum) ஒன்றின் ஊடாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ‘வொஷிங்டன் போஸ்ட்’ (Washington Post) பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஹலிபாக்ஸ் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் (Halifax International Security Forum) கலந்துகொண்ட அமெரிக்க குடியரசுக் கட்சி செனட்டர் மைக் ரவுண்ட்ஸ் (Mike Rounds), இத்தகைய குறிப்பாணை ஒன்று இருப்பதை உறுதிப்படுத்தியதுடன், அதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான கள மட்ட இராணுவ நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனத் தெரிவித்தார். அமெரிக்கப் போர் திணைக்களத்தின் இலக்குகளை முன்னேற்றும் வகையிலான உயர்மட்ட இராணுவ அதிகாரிகளின் சந்திப்புகளுக்கு மட்டுமே இதன் மூலம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிக்குமாறு கனடாவிற்கு அழுத்தம் கொடுப்பதே இதன் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், அமெரிக்க செனட்டர் கிறிஸ் கூன்ஸ் (Chris Coons) இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளார். உலகளாவிய ரீதியில் எதிரிகள் ஒன்றிணைந்து வரும் நிலையில், அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவில் தேவையற்ற விரிசலை ஏற்படுத்தும் வகையில் இத்தகைய நடவடிக்கை அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த கனடாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டி (David McGuinty), “இவ்வாறான ஒரு ஆவணம் இருப்பது குறித்து ஊடகங்கள் வாயிலாகவே முதன்முதலில் அறிந்துகொண்டோம். அதன் உள்ளடக்கம் குறித்து எமக்குத் தெரியாது. ஆனால், கரீபியன் கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பது மற்றும் ஏவுகணைப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் வழமை போலவே இணைந்து செயற்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்தார்.
அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகனின் பேச்சாளர் சீன் பார்னெல் (Sean Parnell) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வழிகாட்டுதல்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உளவுத்துறைத் தகவல் பரிமாற்றத்தையோ, நோராட் (NORAD) மற்றும் நேட்டோ (NATO) அமைப்புகளின் ஊடான ஒத்துழைப்பையோ பாதிக்காது எனத் தெரிவித்துள்ளார்.
வர்த்தகம் மற்றும் பாதுகாப்புச் செலவினங்கள் தொடர்பாக அமெரிக்காவுக்கும் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தலைமையிலான கனடிய அரசாங்கத்திற்கும் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்த இரகசிய உத்தரவு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.