கொழும்பு, பொரளை மயான சுற்றுவட்டத்திற்கு அருகில் பாதசாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் ஜீப் வண்டி சாரதி ஒருவர் பொரளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 20 ஆம் திகதி பிற்பகல் 3.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அச்சமயம் மயான சுற்றுவட்டத்திற்கு அருகிலுள்ள பாதசாரிகள் கடவையின் சமிக்ஞை விளக்கில் சிவப்பு விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தபோது இரண்டு பாதசாரிகள் வீதியைக் கடந்து சென்றுள்ளனர்.
இதன்போது ராஜகிரியவிலிருந்து மயான சுற்றுவட்டம் நோக்கிப் பயணித்த ஜீப் வண்டியின் சாரதியுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து, சாரதி வண்டியிலிருந்து இறங்கி பாதசாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொரளை பொலிஸார், தாக்குதலுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ஜீப் வண்டி சாரதியை நேற்று (21) மதியம் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொரளை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் எனக் கூறப்படுகின்றது.
சந்தேகநபரைக் கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தியதன் பின்னர், அவர் கஞ்சா பாவனைக்கு அடிமையானவர் என மருத்துவ அறிக்கையில் உறுதியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் இன்று (22) புதுக்கடை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.