ஐரோப்பிய நாடான ருமேனியாவின் Găneasa பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய இரண்டு இலங்கைத் தொழிலாளர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 46 மற்றும் 48 வயதுடைய இரண்டு இலங்கைத் தொழிலாளர்கள் மீது, ஆறு மீட்டர் ஆழமுள்ள குழியின் மண் திட்டு திடீரெனச் சரிந்து விழுந்துள்ளது.
மண் சரிவு ஏற்பட்டதும் இருவரும் மண்ணுக்குள் புதையுண்ட நிலையில் அவசர உதவிப் பிரிவினருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
மீட்புப் பணியின் போது மண் மீண்டும் சரிந்து மீட்புப் படையினருக்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் நிலவியதால், குழியின் பக்கவாட்டுச் சுவர்களைப் பலப்படுத்திய பின்னரே தீயணைப்புப் படையினர் மிகக் கவனமாக மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர்.
சுமார் 6 மணி நேரத் தீவிரப் போராட்டத்திற்குப் பின்னர் இடுப்பளவு மண்ணில் புதையுண்டிருந்த முதலாவது தொழிலாளி எவ்வித காயங்களுமின்றி சுயநினைவுடன் மீட்கப்பட்டார்.
அவர் கடும் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்காக உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து மேலும் ஐந்து மணி நேரத் தேடுதலுக்குப் பின்னர் மண்ணுக்குள் புதையுண்டிருந்த இரண்டாவது தொழிலாளியை மீட்டபோது அவர் உயிரிழந்திருந்தார்.
பாரிய கொன்கிரீட் பலகை ஒன்று அவர் மீது விழுந்து நசுக்கியதோடு, அதன் மேல் மண்ணும் சரிந்து மூடியதாலேயே அவரால் உயிர் பிழைக்க முடியாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 மணி நேரத்திற்கும் மேலான மீட்புப் போராட்டத்தின் இறுதியில் இலங்கைத் தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட இச்சம்பவம் புலம்பெயர் இலங்கையர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.