சூடானில் இடம்பெறும் கொடூரங்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு தொடர்பிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் சர்ச்சைக்குரிய ஐக்கிய அரபு இராச்சிய இராஜதந்திரியைப் பிரிட்டனும் பிரான்ஸும் நடைமுறை ரீதியில் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரித்துள்ளதாக நம்பப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய தலைமை இராஜதந்திரியைத் தெரிவு செய்வதற்காக வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாதுகாப்புச் சபையின் ஒன்பதாவது முறைசாரா வாக்கெடுப்பிலும் எந்தவொரு வேட்பாளரும் இறுதி செய்யப்படாத நிலையில், இத்தேர்வு தொடர்ந்தும் இழுபறியிலேயே நீடிக்கிறது.
கோஸ்டாரிக்கா இராஜதந்திரி ரெபேக்கா கிரின்ஸ்பான் (Rebeca Grynspan) இப்போட்டியில் தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் இப்பதவியைப் பெறுவதற்குத் தேவையான 10 வாக்குகளை அவர் பெற்ற போதிலும், வெற்றி பெறும் வேட்பாளருக்குப் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளான (P5) அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா ஆகியவற்றில் எவரிடமிருந்தும் எதிர்ப்பு வாக்குகள் இருக்கக் கூடாது ஆனால் அவருக்கு எதிராக இரண்டு நிரந்தர உறுப்பு நாடுகள் வாக்களித்துள்ளன.
தற்போதைய பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்குப் பதிலாகப் புதியவரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு 100 நாட்களுக்கும் மேலாக நீடித்து, ஐ.நா வரலாற்றிலேயே மிக நீண்ட காலத் தேர்தலாக மாறியுள்ளது. குட்டெரெஸின் இரண்டாவது பதவிக்காலம் டிசம்பர் 31-ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்த வாரம் மற்றுமொரு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
தன்னை எதிர்க்கும் இரண்டு பாதுகாப்புச் சபை நாடுகளின் (அமெரிக்கா மற்றும் ரஷ்யா என நம்பப்படுகிறது) எதிர்ப்பை முறியடித்தால், ஐக்கிய நாடுகள் சபையை வழிநடத்தும் முதலாவது பெண் என்ற பெருமையை கிரின்ஸ்பான் பெறுவார்.
சமீபத்திய வாக்கெடுப்பில் ஆர்ஜென்டினாவின் ரஃபேல் குரோஸி (Rafael Grossi) 8 ஆதரவு வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார் எனினும் நிரந்தர உறுப்பு நாடுகளிடமிருந்து அவருக்கு 3 எதிர்ப்பு வாக்குகள் கிடைத்துள்ளன.
போட்டியில் தாமதமாகக் களமிறங்கிய ஐக்கிய அரபு இராச்சிய இராஜதந்திரி லானா நுசைபே (Lana Nusseibeh) 7 ஆதரவு வாக்குகளைப் பெற்ற போதிலும், நிரந்தர உறுப்பு நாடுகளிடமிருந்து 3 எதிர்ப்பு வாக்குகளைப் பெற்றுள்ளமை அவரால் கடக்க முடியாத தடையாக மாறியுள்ளது. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் பகிரங்க ஆதரவு அவருக்கு இருந்த நிலையில், பல தரப்புத் தகவல்களின்படி பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகள் அவரை நடைமுறை ரீதியில் வீட்டோ செய்துள்ளதாகத் தெரிகிறது.
சூடானில் நடைபெற்று வரும் கொடூரமான மோதல்களுடன் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குத் தொடர்ச்சியான தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படுவதால், லானா நுசைபேயின் வேட்புமனுவிற்குப் பரவலான விமர்சனங்கள் எழுந்திருந்தன. சூடான் கொடூரங்களுடன் ஐக்கிய அரபு இராச்சியத்தைத் தொடர்புபடுத்தி ஐ.நா நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கைகளை நுசைபே “தொடர்ச்சியாக மறுத்தும் நிராகரித்தும்” வந்துள்ளதால், அவர் ஒரு “நம்பகமான வேட்பாளர் அல்ல” எனக் குறிப்பிட்டு, சுமார் 70 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரிட்டன் வெளிவிவகாரச் செயலாளர் எட் மிலிபாண்டிற்குக் கடிதம் எழுதியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.