விடுதலைப் புலிகள் அமைப்பும், ஜே.வி.பி.யும் ஆயுதமேந்திப் போராடியவர்கள் என்றாலும், இனவாதத்தின் அடிப்படையில் அவர்களை இந்த அரசாங்கம் உள்ளிட்ட இலங்கையின் ஆட்சியாளர்கள் வேறுபடுத்தி வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“இன்று இலங்கையின் சட்டம் விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்துள்ளது.
அதேபோல, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதோ, அவரின் புகைப்படங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்வதோ தடையாகக் கருதப்படுகிறது.
எந்தவிதக் கொண்டாட்டங்களையும் அவர் சார்பில் முன்னெடுக்கக் கூடாது எனச் சட்டம் சொல்கிறது.
அப்படியிருக்கையில், ஜே.வி.பி.யின் தலைவர் ரோஹண விஜேவீரவும், ஜே.வி.பி.யுடன் தொடர்புடைய பலரும் இன்று தடைசெய்யப்பட்டவர்கள் அல்ல.
ஒரு காலத்தில் தடை செய்யப்பட்டவர்கள் என்றாலும், இன்று அவர்கள் தடை செய்யப்பட்டவர்கள் அல்ல.
அப்படியென்றால், விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்வதற்கும், ஜே.வி.பி. அமைப்பைத் தடை செய்யாமல் இருப்பதற்கும் இடையிலான வேறுபாடு என்ன?
இதன் பெயரே இனவாதம்
இரு தரப்பும் ஆயுதமேந்தியவர்கள். ஆயுதமேந்திய விடயம்தான் பயங்கரவாதம் என்றால் இரு தரப்பும் தடை செய்யப்பட வேண்டும்.
இல்லையென்றால், ஆயுதப் போராட்டம் இல்லாத இந்தச் சந்தர்ப்பத்தில் இரு தரப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?
விடுதலைப் புலிகள் அமைப்பு வடக்கு, கிழக்கை மையப்படுத்திப் போராட்டத்தை முன்னெடுத்தது.
ஆனால், ஜே.வி.பி. முழு நாட்டையும் பிடிக்கப் போராடியது. இதில் என்ன நியாயம் இருக்கிறது? இதன் பெயரே இனவாதம். இவ்வாறான விடயங்களே நாட்டைப் பிரித்து வைத்துள்ளன” என்றார்