இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) தமக்கெதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்குத் தாம் குற்றவாளிகள் அல்ல என யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட ஆகியோர் இன்று (23) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இரு பிரதிவாதிகளுக்கும் எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் பிரதிவாதிகளுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பகிரங்க நீதிமன்றத்தில் வாசித்துக் காண்பிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, இரு பிரதிவாதிகளும் தாம் அக்குற்றச்சாட்டுகளுக்குக் குற்றவாளிகள் அல்ல எனத் தெரிவித்ததாக செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, வழக்கின் சாட்சிப் பதிவுகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், மேலதிக விசாரணைகள் எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.