கொழும்பு கோட்டை டிரான்ஸ்வேர்க்ஸ் சதுக்கக் காணியை கிரிஷ் நிறுவனத்திற்குக் குத்தகைக்கு வழங்கும் கொடுக்கல் வாங்கலில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் ரூபாய் பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்நிறுவனத்தின் பணிப்பாளர் கீதாஞ்சலி ஜானகி டி சொய்சா சிறிவர்தனவை எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி (01.12.2026) வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம வெள்ளிக்கிழமை (20.11.2026) உத்தரவிட்டார்.
நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான கொழும்பு கோட்டை டிரான்ஸ்வேர்க்ஸ் சதுக்கம் எனப்படும் காணியை, கிரிஷ் டிரான்ஸ்வேர்க்ஸ் தனியார் நிறுவனத்திற்கு (Krrish Transworks Colombo (Pvt) Ltd) கையகப்படுத்திக்கொள்வதற்குத் தேவையான அனுமதிகளைத் துரிதமாகப் பெற்றுக்கொள்வதற்காக 70 மில்லியன் ரூபாய் பணத்தை இலஞ்சமாக வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், அந்நிறுவனத்தின் இந்தியப் பிரஜைகளான பணிப்பாளர்கள் அமித் கட்டியார், ராஜேந்திர பிரசாத் குப்தா, அந்நிறுவனத்தின் பணிப்பாளர் கீதாஞ்சலி ஜானகி டி சொய்சா சிறிவர்தன மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகிய சந்தேகநபர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டிருந்த நாமல் ராஜபக்ஷவுக்குக் கடந்த வழக்குத் தவணையின் போது பிணை வழங்கப்பட்ட போதிலும், அப்பிணை உத்தரவை இடைநிறுத்தி கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த 18 ஆம் திகதி (18.11.2026) இடைக்காலத் தடையுத்தரவொன்றைப் பிறப்பித்திருந்தது.
சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவைச் சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னரே இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
நீதவான் தனது உத்தரவை அறிவிக்கையில், நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பின், அவரை எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி (01.12.2026) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்.