செங்கல்பட்டு:
திமுகவின் ‘பி’ டீம் தான் தவெக என்றும், திமுக கொரோனா; உருமாறிய கொரோனா தவெக எனவும் அதிமுக எம்.பி. இன்பதுரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதுராந்தகம் தேர்தல் களம்:
மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், மதுராந்தகத்தில் உள்ள அதிமுக தேர்தல் அலுவலகத்தில், அதிமுக மாநில வழக்கறிஞர் அணிப் பிரிவின் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இன்பதுரை தலைமையில் பூத் கமிட்டி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
உருமாறிய கொரோனா தவெக:
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இன்பதுரை எம்.பி., “அதிமுக தொகுதியை ஏன் திருட முற்படுகிறீர்கள்? மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏவை விலைக் கொடுத்து வாங்கிவிட்டீர்கள் என்பது குற்றச்சாட்டு. அதிமுகவை வீழ்த்துவதற்காக திமுகவின் ஏற்பாட்டில் தொடங்கப்பட்ட கட்சி தான் தவெக. தவெக என்பது திமுகவின் ‘பி’ டீம். திமுக கொரோனா என்றால், உருமாறிய கொரோனா தான் தவெக” என்று விமர்சித்தார்.
நம்பியார் போன்ற வில்லன்:
தொடர்ந்து பேசிய அவர், “உண்மையிலேயே எம்ஜிஆர் மீது பற்று இருந்தால் அதிமுக தொகுதியைத் திருடியிருப்பீர்களா? திரைப்படத்தில் நம்பியார் எம்ஜிஆர் போன்று மாஸ்க் அணிந்து, நான்தான் எம்ஜிஆர் எனக் கூறுவார். ஆனால் அது மக்களுக்குத் தெரிந்துவிடும். எம்ஜிஆரின் பெயரைச் சொல்லிப் போலி அன்பின் மூலம் அதிமுகவின் வாக்கு வங்கியைத் திருப்பிவிடலாம் என நினைக்கிறார்கள். எம்ஜிஆர் என்பது இன்று அதிமுகவாக உள்ளது. அதிமுகவுக்கு எதிராக எந்த சக்தி இருந்தாலும் அது நம்பியார் போன்ற வில்லன் தான். மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அதிமுக மிகப்பெரிய வெற்றியைப் பெறும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
#Inbadurai #AIADMK #TVK #DMK #TNPolitics #Maduranthakam #ByElection2026 #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive