செம்மணி மனித புதைகுழி குறித்த பேராசிரியர் ராஜ்சோமதேவ வெளியிட்டுள்ள இடைக்கால அறிக்கை குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள பிரித்தானிய தமிழர் பேரவை இந்த அறிக்கை உண்மையை கண்டறியும் முயற்சிகளை சீர்குலைக்கலாம் என தெரிவித்துள்ளது.
பிரித்தானிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது
செம்மணி மனித புதைகுழிக்குள் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொற்றுநோயால் அல்லது இயற்கை அனர்த்தத்தினால் இறந்தவர்களுடையதாகயிருக்கலாம் என பேராசிரியர் ராஜ்சோமதேவ தெரிவித்துள்ளமை குறித்து பிரித்தானிய தமிழர் பேரவை தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொள்கின்றது.
கல்விபதிவுகள் மற்றும் மற்றும் சுயவிவரச்சுருங்கங்கள் பேராசிரியர் ராஜ்சோமதேவவின் முதன்மை நிபுணத்துவங்கள் மற்றும் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிகள் இலங்கையின் குடியிருப்பு தொல்லியல் முன்வரலாற்று தொல்லியல் சூழலியல் தொல்லியல் சார்ந்தவை என்பதை உறுதிப்படுத்துகின்றன
அவர் ஒரு சிறப்பு தடயவியல் மானுடவியலாளரோ அல்லது தடயவியல் தொல்லியலாளரே அல்ல இருந்தபோதிலும் இலங்கையில் இடம்பெறும் மனித புதைகுழி அகழும் நடவடிக்கைகளில் விசாரணைகளில் அவரே முதன்மை தொல்லியல் அதிகாரியாக அடிக்கடி நியமிக்கப்பட்டு வந்துள்ளார்.
குழந்தைகளின் உடல்கள் என நம்பப்படும் உடல்கள் உட்பட 583 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இத்தகைய ஊகங்கள் உண்மையை கண்டறியும் முயற்சிகளை சீர்குலைக்கலாம் சான்றுகளின் நம்பகதன்மையை சீர்குலைக்கலாம் அல்லது சட்டவிரோத படுகொலைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பலாம் என நாங்கள் எங்கள் கவலையை வெளியிடுகின்றோம்.
எந்தவொரு விளக்கமும் வலுவான சுயாதீன சரிபார்க்கப்படக்கூடிய சான்றுகளால் ஆதரிக்கப்டவேண்டும்.
செம்மணி மனித புதைகுழிகளை சுற்றியுள்ள சூழ்நிலைகள் இன்னமும் தீர்க்கப்படாமலேயே உள்ளன,அத்தகையதொற்றோ அல்லது இயற்கை பேரழிவோ நிகழ்ந்தது என்பதையோ அது இந்த இடத்துடன் தொடர்புபட்டது என்பதையோ நிரூபிக்கும் சுயாதீனமாக சரிபார்க்கப்பட்ட வரலாற்று அறிவியல் சான்றுகள் இல்லாத நிலையில் இத்தகைய ஒரு கோட்பாடு உருவெடுப்பது வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற ஆய்வினை கோரும் தீவிர கேள்விகளை எழுப்புகின்றது
அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச தடயவியல் மானுடவியலாளர்கள் நோயியல் வல்லுனர்கள் சர்வதேச சட்ட பார்வையாளர்களை மனித புதைகுழி உள்ள இடங்களுக்கு அனுப்பி சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப ஆராய்ச்சிகளை நடத்தவேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.