இத்தாலியின் பல்வேறு நகரங்களில் மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்புப் பணிகளுக்காக இராணுவத்தினரும் பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மிலான், ரோம், டுரின், நேபிள்ஸ், போலோன்யா மற்றும் புளோரன்ஸ் உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பேரணிகளில் பங்கேற்றனர். சமூக மற்றும் அரசியல் ரீதியான பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
சில போராட்டக்காரர்கள் போத்தல்கள், கற்கள் மற்றும் பட்டாசுகளை வீசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிலானில் நடைபெற்ற பேரணி அமைதியான முறையில் இடம்பெற்ற நிலையில், அங்கு பாதுகாப்புக்காக இராணுவத்தினரும் பொலிஸாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், பல ஆடம்பரப் பொருட்கள் விற்பனை நிலையங்களின் ஜன்னல்கள் சேதங்களைத் தவிர்க்கும் வகையில் மூடிப் பாதுகாக்கப்பட்டன.
பொதுமக்களின் பாதுகாப்பையும் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையையும் பாதுகாத்த சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு இத்தாலியப் பிரதமர் ஜோர்ஜியா மெலோனி நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைத்தளமான எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட அவர், போராட்டம் நடத்துவதற்கான உரிமை எப்போதும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதேவேளை, மக்கள் தங்கள் நகரங்களில் பாதுகாப்பாக வாழ்வதற்கான உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.