சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளினால் கொழும்பு நகரம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் மே தினப் பேரணிகள் மற்றும் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்காரணமாக, மே தினக் கொண்டாட்டங்கள் நடைபெறும் இடங்களை உள்ளடக்கியதாக விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண போக்குவரத்துப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
மே தினக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்காக அனைத்து வாகன மற்றும் வீதிப் பாதுகாப்புத் திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று விசேட பாதுகாப்புத் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு, சில பாதுகாப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, இது தொடர்பான புலனாய்வு அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, பாதுகாப்பு மதிப்பீட்டின் பேரில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புலனாய்வு அதிகாரிகளையும் நாங்கள் கடமையில் ஈடுபடுத்தியுள்ளோம்.
இந்த மே தினப் பேரணிகள் மற்றும் கூட்டங்கள் நடத்துதல் மற்றும் இதர நடவடிக்கைகளுக்காக ஒன்று கூடும் சம்பந்தப்பட்ட கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவோம்.
பெருமளவில் மக்கள் ஒன்றுகூடி நடத்தும் மே தினக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்காக, சம்பந்தப்பட்ட மாகாணங்களின் கோட்டப் பொறுப்பதிகாரிகள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் மேற்பார்வையின் கீழ் அனைத்துத் திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.