சென்னை:
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள ‘சண்டியர்’ படத் தலைப்பை மாற்றக் கோரி வரும் டிசம்பர் 7-ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகப் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் மனு:
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, “கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள படத்திற்கு ‘சண்டியர்’ எனப் பெயர் வைக்கத் தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது என ஏற்கனவே அமைச்சர் ராஜ்மோகனிடம் மனு அளித்தோம். அதேபோல தயாரிப்பாளர் சங்கத்திடமும் இது குறித்து மனு அளித்திருந்தோம். அதன் பிறகு 10 நாட்கள் படக்குழுவிற்கு அவகாசம் வழங்கினோம். 2004-இல் தடை செய்யப்பட்ட தலைப்பை ஏன் மீண்டும் வைக்கிறார்கள்? இது தனிப்பட்ட முறையில் கிருஷ்ணசாமிக்கும் கமல்ஹாசனுக்கும் நடக்கும் பிரச்சினை இல்லை; தென் மாவட்டங்களில் நடக்கும் பிரச்சினைகளால் இதைப் பற்றிப் பேசுகிறோம்,” என்றார்.
மீண்டும் போஸ்டர் ஒட்டிய படக்குழு:
தொடர்ந்து பேசிய அவர், “ஏற்கனவே ‘சண்டியர்’ படத்தின் பெயரை மாற்றிப் படப்பிடிப்பு நடத்தலாம் என 10 நாட்களுக்கு முன்பு கூறியிருந்தோம். ஆனாலும், நாங்கள் படத்தின் தலைப்பை மாற்ற மாட்டோம் என்பது போல் படக்குழுவினர் மீண்டும் ‘சண்டியர்’ என்ற தலைப்பில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். கமல்ஹாசன் படங்களில் இடம்பெற்ற சாதி தொடர்பான காட்சிகளால் கடந்த காலங்களில் பல பிரச்சினைகள் நடந்துள்ளன. அதனால்தான் இந்தத் தலைப்பை மாற்றச் சொல்கிறோம்,” எனக் குறிப்பிட்டார்.
டிசம்பர் 7-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம்:
மேலும் போராட்டத் திட்டம் குறித்து அறிவித்த கிருஷ்ணசாமி, “இந்த ‘சண்டியர்’ தலைப்பை மாற்றக் கோரி வரும் டிசம்பர் 7-ஆம் தேதி புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அன்றைய தினமே சாஸ்திரி பவனில் உள்ள தணிக்கைக் குழுவிடம் இந்தப் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என மனு அளிக்க உள்ளேன். மேலும் ‘திரை உலகமே திருந்தப் பார்’ என்ற கருத்தரங்கத்தையும் நடத்த உள்ளோம். எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து சாஸ்திரி பவன் வரை ஊர்வலமாக வந்து தணிக்கைக் குழு உறுப்பினர்களிடம் மனு அளிக்க உள்ளோம். அதற்குக் காவல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம்; பின்னர் போராட்டம் நடைபெறும் இடம் உறுதி செய்யப்படும்,” என்று கூறினார்.
முன்னதாக, கடந்த 2004 ஜனவரியில் வெளியான கமல்ஹாசனின் ‘விருமாண்டி’ படத்திற்கும் முதலில் ‘சண்டியர்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
#Krishnasamy #PuthiyaTamilagam #Sandiyar #KamalHaasan #ChennaiProtest #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive