சென்னை:
“தவெக-வுக்கு ஆதரவுக் கடிதம் கொடுத்த பிறகு, மாலை 4.45 மணிக்கு எனக்கு ஒரு போன் வந்தது. உங்களை முதலமைச்சராக அறிவிக்கப் போகிறோம், செய்தியாளர்களைச் சந்திக்காதீர்கள் என்று கூறினார்கள்” எனத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் திரைமறைவில் நடந்த அதிர்வலைகள் குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்பி பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டியில், தேர்தல் முடிவுகள் மற்றும் கூட்டணி நகர்வுகள் குறித்துப் பல்வேறு ரகசியங்களை உடைத்துப் பேசியுள்ளார். அவர் கூறியதாவது: “இந்தத் தேர்தலில் தொங்கு சட்டசபை அமையும் என்பதை நான் முன்பே யூகித்திருந்தேன். தவெக-வுக்கு ஆட்சி அமைக்க 11, 12 இடங்கள் குறைவாக இருந்த சூழலில், மே 5-ஆம் தேதி நாங்கள் திமுக தலைவரைச் சந்தித்தோம். அப்போது அவர், இது மக்கள் அளித்த தீர்ப்பு, விஜய் ஆட்சி அமைப்பதை நாம் யாரும் இடையூறு செய்யக் கூடாது; ஒற்றுமையாகச் செயல்படுவோம் என்றார். ஆனால், மே 7-ஆம் தேதி எங்களை அழைத்துப் பேசிய போது, அதிமுக – திமுக இணைந்து ஆட்சி அமைக்கலாமா, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கலாமா என்ற பேச்சு எழுந்தது. நான் உடனடியாக, இது திமுக-வின் எதிர்காலத்தையே சூனியமாக்கிவிடும், நல்ல முயற்சி இல்லை எனக் கூறி மறுத்துவிட்டேன்.”
மேலும், தனக்கு வந்த முதலமைச்சர் ஆஃபர் குறித்துப் பேசிய அவர், “மே 8-ஆம் தேதி இடதுசாரிகளைத் தொடர்ந்து நாங்களும் தவெக-வை ஆதரிப்பது என முடிவு செய்தோம். ஆனால், அதற்குள் அதிமுக தரப்பில் இருந்து ஒரு பேச்சு எழுந்தது. திருமாவளவனைப் பொதுவாக முதலமைச்சராகவும், இபிஎஸ் உள்ளிட்டோரைத் துணை முதலமைச்சராகவும் ஏற்பதற்கு அவர்கள் தயாராக இருப்பதாகவும், அப்படி நடந்தால் வெளியில் இருந்து ஆதரிப்பதாகவும் கூறினர். இதற்கிடையே, விசிக நிர்வாகிகள் தவெக அமைச்சரவையில் நாம் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தினர். தவெக தரப்பிலும் இதனை விரும்பி, எங்களைத் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடவும் அழைத்தனர். தம்பி விஜய்யும் என்னைத் தொலைபேசியில் அழைத்து, நீங்கள் விரும்பியது போல் அமைச்சரவையில் இருக்கலாம் என்றார்.”
“இதையடுத்து, மே 9-ஆம் தேதி மதியம் 3 மணிக்கு ஆதரவைத் தெரிவித்துவிட்டு, 4 மணிக்குத் தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவிடம் ஆதரவுக் கடிதத்தைக் கொடுத்தோம். அந்தக் கடிதத்தைக் கொடுத்துவிட்டு செய்தியாளர்களைச் சந்திக்க நான் அலுவலகம் வந்த போது, மாலை 4.45 மணிக்கு ஒரு முக்கிய நபர் எனக்குப் போன் செய்தார். ‘அனைத்தும் முடிந்துவிட்டது, ஆதரவுக் கடிதம் கொடுத்திருந்தாலும் செய்தியாளர்களைச் சந்திக்காதீர்கள்; உங்களை முதலமைச்சராக அறிவிக்கப் போகிறோம்’ என்றார். ஆனால், நான் வேண்டாம், நாங்கள் ஆதரவுக் கடிதம் கொடுத்துவிட்டோம் என்று கூறிவிட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்தேன்” என்று திருமாவளவன் அந்தப் பேட்டியில் விவரித்துள்ளார். தமிழக அரசியல் வரலாற்றையே மாற்றியமைக்கவிருந்த அந்த ஒரு போன் கால் குறித்த திருமாவளவனின் இந்தப் பேச்சு தற்போது அரசியல் வட்டாரங்களில் காட்டுத்தீயாய் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
#ThirumavalavanSpeech #VCK_Leader #VijayAsCM #BreakingNews #May18 #TamilNaduPolitics #TVK_Government #ThalapathyVijay #SecretAlliance #ADMK_Offer #MKStalin #EPS #AadavArjuna #TN_Politics2026 #PoliticalSecrets #CM_PostOffer #CoalitionGovernment #TamilNews #VijayMakkalIyakkam #CM_Vijay_Official_“`