மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறளை மேற்கோள் காட்டி மலேசிய பார்லியில் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் உரையாற்றியது, வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் அந்நாட்டு பார்லிமென்டில், 2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றும் போது, திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார்.
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு
என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி ஒரு சிறந்த நாட்டிற்குத் தேவையான தகுதிகள் எவை என்பதை அவர் விளக்கினார். இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
குறையாத விளைபொருள்களையும், தகுதியான சான்றோர்களையும், கேடில்லாத பெருஞ்செல்வர்களையும் கொண்டு, இவை அனைத்தும் ஒன்றாகக் கூடிப் பொருந்தி வாழும் இடமே உண்மையான சிறந்த நாடு என்பது திருக்குறளின் பொருளாகும்.
மலேஷிய பிரதமர், இந்தியர்கள் மீதும், குறிப்பாக தமிழர்கள் மீதும் பேரன்பு கொண்டவர். திருக்குறளை போற்றி புகழ்பவர். 2023ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது, ‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு’ என்ற திருக்குறளை பார்லியில் கூறியவர் அன்வர் இப்ராஹிம்.
2024ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது, ‘உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு’ என்ற திருக்குறளை கூறி பொருள் விளக்கம் கூறியது குறிப்பிடத்தக்கது.