தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் வெறுப்புப் பேச்சுக்களைப் பதிவேற்றும் செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான வெறுப்புப் பேச்சுக்கள் தொடர்பான பதிவுகள் குறித்து சைபர் குற்றப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சில பகுதிகளில் கைதுகளும் இடம்பெற்றுள்ளன; மேலும், இது குறித்த அறிக்கைகள் நீதிமன்றத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன எனப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9, 2026) நடைபெற்ற அமர்வில், நிலையியல் கட்டளை 27(2)-இன் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் எம். எல். ஏ. ஹிஸ்புல்லா எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:
“முஸ்லிம் சமூகத்தினரை மாத்திரம் இலக்காகக் கொண்டு சமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சுக்களும் முரண்பாடுகளை ஏற்படுத்தும் கருத்துக்களும் பதிவேற்றம் செய்யப்படுவதாக எவ்வித முறைப்பாடுகளும் தகவல்களும் கிடைக்கவில்லை.
எனினும், பொதுவாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதை அவதானிக்க முடிகிறது.
தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் இருந்தவாறு போலியான முகநூல் கணக்குகளைத் தயாரித்து, அதன் ஊடாக வெறுப்புப் பேச்சுக்களைப் பரப்பும் செயற்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறான இன நல்லிணக்கத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் செயற்பாடுகள் மற்றும் வெறுப்புப் பேச்சுக்களுக்கு எதிராகச் சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கடந்த காலங்களில் இனவாதத்தை முன்னிலைப்படுத்திச் செயற்பட்ட தரப்பினர் இன்றும் அதே பழைய பழக்கத்துடன்தான் செயற்படுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் எத்தகைய முரண்பாடுகளும் தோற்றம் பெறவில்லை; இனிவரும் காலங்களிலும் அவ்வாறான விரும்பத்தகாத நிலை எற்படாது” என்றார்.