மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவைச் சிறையில் அடைத்தமைக்காகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர்; ஆனால், நான் மகிழ்ச்சியடைய மாட்டேன். எமது புலம்பெயர்ந்தவர்களிடம் நீங்கள் வாங்கிய பணத்துக்காக அவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றீர்கள். மஹிந்த குடும்பம் தொடர்பில் பிரபாகரனால் செய்ய முடியாததை தற்போது நீங்கள் செய்கிறீர்கள் எனத் சுயேட்டைக் குழு 17 இன் தலைவரும் யாழ்., மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அர்ச்சுனா இராமநாதன் எம்.பி. இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:
“ஊழல் மோசடிகள் சட்டத்தின் மூலம் பிரபாகரனால்கூடச் செய்ய முடியாமல் போனதை நீங்கள் செய்து கொடுத்துள்ளீர்கள். மகிந்த ராஜபக்ஷவையும், அவரின் மனைவியையும், அவரின் மகனையும் சிறையில் அடைத்து எமது மக்களை உற்சாகப்படுத்துகிறீர்கள்; நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எமது புலம்பெயர்ந்தவர்களுக்கு நீங்கள் வாங்கிய பணத்துக்காகப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறீர்கள்.
இப்போது கோட்டாபய ராஜபக்ஷ மட்டுமே மிச்சமாக இருக்கின்றார்; நாங்கள் மகிழ்ச்சியடைவோம். இங்கு ‘டபிள் கேம்’ நடக்கின்றது. டயஸ்போரா நீங்கள் செய்யும் வேலைகளுக்கு மகிழ்ச்சியடைகிறது.
நீங்கள் அரசியலில் எதிரானவர்களைப் பிடித்துச் சிறையில் அடையுங்கள். டயஸ்போராக்களை மகிழ்ச்சிப்படுத்துங்கள். மஹிந்தவின் மனைவி ஷிராந்தியை உள்ளே போட்டதற்காகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். ஆனால், நான் மகிழ்ச்சியாக இல்லை. நீங்கள் அரசியலையே செய்கிறீர்கள். மஹிந்த ராஜபக்ஷ மாரடைப்பு ஏற்பட்டு இறக்க வேண்டுமாயின், அவரின் மனைவியை உள்ளே போடுங்கள்.
மஹிந்த, ஷிராந்தி, கோட்டா, நாமல் ஆகியோரை உள்ளே போடுமாறு டயஸ்போரா கூறியது. பிரபாகரனால் செய்ய முடியாததை நீங்கள் செய்வதற்காக எமது மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர். எப்படியாவது மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் அவர்களை உள்ளே போடுங்கள்; அப்போது உங்களுக்கு வாக்குகள் கிடைக்கும்.” என்றார்.