சவூதி அரேபியா மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆகிய இரு தரப்புக்கும் இடையே மோதல் தீவிரமாகியுள்ளது. இந்த இருமுனைத் தாக்குதல்களில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (17) சவூதியின் தென்கிழக்கில் உள்ள தைப் நகர் மீது ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததோடு 2 பேர் காயமடைந்துள்ளனர்.
அதேபோன்று, ஏமனில் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தைஸ் நகரில் சவூதி அரேபியா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உள்நாட்டுப் போர் நடவடிக்கையில் ஈடுபட்டதன் விளைவாக ஏமனில் பல பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுத உதவி முதலான பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
இந்நிலையில், தற்போது சவூதி அரேபியாவிலும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதற்கு பதிலடியாக சவூதியும் ஹவுதிகள் மீது எதிர்த்தாக்குதல் நடத்துகிறது. இதன் காரணமாக மேற்காசியாவில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.