அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பில் ஈரான் போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை விவகாரங்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டன.
இந்த உயர்மட்டச் சந்திப்பு நடந்து கொண்டிருக்கும் வேளையிலேயே, ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே கப்பல்கள் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓமான் கடற்கரைக்கு அப்பால் தமது கப்பல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளானதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இது குறித்த மேலதிக விவரங்களை உடனடியாக வெளியிடாத இந்தியா, கப்பலில் இருந்த ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது.
மற்றொரு சம்பவத்தில், ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஃபுஜைரா துறைமுகக் கடற்கரையில் நங்கூரமிட்டிருந்த கப்பல் ஒன்றிற்குள் அங்கீகரிக்கப்படாத நபர்கள் புகுந்து, அதை ஈரான் நோக்கிச் செலுத்தி வருவதாக பிரிட்டனின் கடல்சார் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையை நிர்வகிக்கும் ஈரானின் நடைமுறைகள் குறித்த புரிந்துணர்வைத் தொடர்ந்து, சில சீனக் கப்பல்கள் அந்த வழியாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளதாக அந்த நாட்டின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் வெளியுறவு அமைச்சர் மற்றும் தூதுவரின் கோரிக்கையை ஏற்று, இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டாண்மையின் அடிப்படையில் இந்த வசதியை ஈரான் செய்துகொடுத்துள்ளதாகத் தெரிகிறது.