இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சசி தரூர், இலங்கைக்கான தனது விஜயத்தின் முதல் நாளில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து மதிய உணவுடன் கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பதிவில் கருத்து வெளியிட்டுள்ள அவர், முன்னாள் ஜனாதிபதியுடனான அன்பான கலந்துரையாடல் தனது இலங்கை விஜயத்தின் முதல் நாளை சிறப்புமிக்கதாக மாற்றியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த சில ஆண்டுகளில் நாட்டிற்காக ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட தியாகங்களும் சேவைகளும், நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் வேகத்தில் மறைக்கப்பட்டிருந்தாலும், சமகால அரசியல் மதிப்பீடுகளை விட வரலாறு அவருக்கு அதிக நீதி வழங்கும் என நம்புவதாக சசி தரூர் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுடன் தனக்கு சுமார் இருபது ஆண்டுகளாக நட்புறவு இருப்பதாகவும், இலங்கையின் நலனையும் தெற்காசிய பிராந்தியத்தின் நிலைத்தன்மையையும் உண்மையிலேயே மனதில் கொண்டு செயல்படும் தலைவராக அவரை தான் கருதுவதாகவும் அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சசி தரூரின் இந்தக் கருத்து, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் பங்களிப்பு மற்றும் அவரது தலைமையை மீண்டும் சர்வதேச கவனத்திற்கு கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.