ரொறன்ரோ பொலிஸார், கவனம் சிதறடிக்கும் திருட்டுச் சம்பவத்தின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டவரின் மீது சந்தேக நபர் ஒருவர் ‘கெட்சப்’ (Ketch-up / தக்காளிச் சாஸ்) ஊற்றுவதைக் காட்டும் பாதுகாப்புக் கேமரா காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரலில் முதியவர் ஒருவரைக் குறிவைத்து ஸ்கார்பரோவில் இடம்பெற்ற இத்திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய, தேடப்பட்டு வரும் சந்தேக நபர்களின் புதிய புகைப்படங்களைப் பொலிஸார் பகிர்ந்து வருகின்றனர்.
இச்சம்பவம் ஏப்ரல் 15 ஆம் திகதி பிற்பகல் 2:20 மணியளவில், எக்லிண்டன் அவெனியூ ஈஸ்ட் மற்றும் பார்மசி அவெனியூ பகுதிக்கு அருகிலுள்ள வங்கி ஒன்றில் நிகழ்ந்துள்ளது.
ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் முதியவரைப் பின்தொடர்ந்து வங்கிக்குள் சென்று, அவர் பணம் எடுப்பதைக் அவதானித்த பின்னர், அவரைப் பின்தொடர்ந்து வெளியே வந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவரை வங்கியிலிருந்து பின்தொடர்ந்து வெளியேறும் காட்சி கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான காணொளியை மே மாதத்தில் பொலிஸார் வெளியிட்டிருந்தனர். அந்தக் காணொளியில், ஆண் சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரின் முதுகில் கெட்சப் சாஸைத் தெளித்துவிட்டு நடந்து செல்வது காணப்படுகிறது.
அதனையடுத்து, அந்தப் பெண் பாதிக்கப்பட்டவரை அணுகி, அவரது கோட்டின் (Jacket) பின்புறத்தைச் சுத்தம் செய்ய உதவுவதாகக் கூறியதாகவும், முதியவருக்கு உதவி செய்யப்படும் போதே இருவரும் சேர்ந்து அவரது பணத்தைத் திருடியதாகவும் ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் சந்தேக நபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
விசாரணையாளர்கள் சந்தேக நபர்களின் புதிய புகைப்படங்களைப் பெற்று, ஞாயிற்றுக்கிழமை அவற்றை மக்களுக்கு வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபரான ஆடவர் பருத்த உடலமைப்பும் சிறிய தாடியும் கொண்டவர் என பொலிஸார் விவரித்துள்ளனர். அவர் கண்ணாடி, கருப்பு நிறக் கோட், கருப்பு நிறக் காற்சட்டை மற்றும் விசேட நிறச் காலணிகளை அணிந்திருந்ததாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை, அந்தப் பெண் மெலிந்த உடலமைப்பும், குதிரை வால் (Ponytail) பாணியில் கட்டப்பட்ட கருமையான தலைமுடியும் கொண்டவர் என அதிகாரிகள் விவரித்துள்ளனர். அவர் வெளிர் நிறக் கோட், கழுத்துப்பட்டை (Scarf), வெள்ளை நிறக் காலணிகளை அணிந்திருந்ததோடு, கருமையான பின்புறப் பையையும் (Knapsack) சுமந்து சென்றுள்ளார்.
தகவல் தெரிந்த எவரும் தம்மையோ அல்லது ‘க்ரைம் ஸ்டாப்பர்ஸ்’ (Crime Stoppers) அமைப்பையோ அநாமதேயமாகத் தொடர்புகொள்ளுமாறு விசாரணையாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.