பத்து ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, கரீபியன் நாடான ஹைட்டியில் (Haiti) இலங்கை மீண்டும் தனது அமைதி காக்கும் பணிகளைத் தொடங்கவுள்ளதாக சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நியூயார்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் செயல்பாடுகள் திணைக்களத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இலங்கைப் படையினரை மீண்டும் பணியில் அமர்த்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஐநா வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்சுடன் (Marc-Andre Franche) இது தொடர்பாக விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்தப் படைகளை அனுப்புவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது குறித்து இதன்போது ஆராயப்பட்டது.
கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை சுமார் 11 ஆண்டுகள் இலங்கை இராணுவம் ஹைட்டியில் பணியாற்றியது. அக்காலப்பகுதியில் மொத்தம் 16,000-க்கும் மேற்பட்ட இலங்கைப் படைவீரர்கள் அங்கு சேவையாற்றியுள்ளனர்.
முன்னைய பணிகளின் போது ஆறு இலங்கை வீரர்கள் உயிரிழந்ததுடன், 18 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.