நவம்பர் மாதம் 12 திகதி முதல் 28ஆம் திகதிக்குள் மூன்று எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடையும் என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டையில் உள்ள தனது எல்பிஜி முனையம் வழியாக உள்நாட்டு சந்தைக்கு எரிவாயுவை வழங்குவதற்கான தேவையான ஒப்புதல்களை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக அந்நிறுவனம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
தற்போதைய எரிவாயு விநியோக தடையால் உள்நாட்டு நுகர்வோர் மற்றும் வர்த்தக சமூகம் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு அந்நிறுவனம் தனது மனமார்ந்த வருத்தத்தினையும் தெரிவித்துள்ளது.
25 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை எல்பிஜி சந்தைக்கு சேவை செய்து வரும் ஒரு உள்ளூர் நிறுவனம் என்ற முறையில், எரிவாயு விநியோகத்தை மீட்டெடுப்பதற்கும் நீண்டகால விநியோக நம்பகத்தன்மையை வலுப்படுத்துவதற்கும் தொடர்ந்து உறுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.
அதன்படி, எரிவாயு கப்பல்கள் நவம்பர் 12-14 திகதிகளில் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கும், நவம்பர் 15-17 திகதிகளில் கொழும்பு துறைமுகத்திற்கும், நவம்பர் 24-28 திகதிகளில் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கும் வந்து சேரும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.