சென்னை:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10 வகையான காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு’ விற்பனை செய்யப்பட உள்ளதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு:
பொதுமக்கள் பண்டிகையைக் கூடுதல் செலவின்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நோக்கில், அத்தியாவசிய சமையல் காய்கறிகளை மிகக் குறைந்த விலையில் நுகர்வோருக்கு வழங்கக் கூட்டுறவுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட 218 கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் சென்னையில் இயக்கப்பட உள்ள 4 நடமாடும் காய்கறி அங்காடிகள் மூலம், நவம்பர் 5 முதல் நவம்பர் 7 வரை மூன்று நாட்களுக்கு இந்தச் சிறப்பு விற்பனை நடைபெறவுள்ளது. பொதுமக்களின் தினசரி சமையல் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்யும் வகையில், இந்த ஒரு தொகுப்பில் மொத்தம் 2.5 கிலோவிற்கும் அதிகமான எடையில் பத்து வகையான காய்கறிகள் வழங்கப்படுகின்றன.
பட்டியலில் உள்ள காய்கறிகள்:
இதில் 500 கிராம் பெரிய வெங்காயம், 500 கிராம் தக்காளி, 250 கிராம் கத்தரிக்காய், 250 கிராம் உருளைக்கிழங்கு, 200 கிராம் கேரட், 200 கிராம் பீன்ஸ், 100 கிராம் பச்சை மிளகாய், 100 கிராம் எலுமிச்சை, 50 கிராம் இஞ்சி மற்றும் ஒரு தேங்காய் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில் உள்ள எந்தவொரு காய்கறிகளின் அளவைக் குறைக்கவோ அல்லது மாற்றவோ கூடாது என்றும், குறிப்பிட்ட நிகர எடையில் புதிய மற்றும் தரமான காய்கறிகளை மட்டுமே பொட்டலமிட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யப்படும் இக்காய்கறிகள் சிறப்புப் பைகளில் அடைக்கப்பட்டு நுகர்வோருக்கு விநியோகிக்கப்படும்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு தொகுப்பு:
வெளிச்சந்தையைக் காட்டிலும் மிகவும் மலிவாக வெறும் 100 ரூபாய்க்கு வழங்கப்படும் இந்தத் தொகுப்பினால் ஏற்படும் கூடுதல் கொள்முதல் விலை வித்தியாசம் மற்றும் பொட்டலமிடுதல் செலவைக் கூட்டுறவு கல்வி நிதியிலிருந்து அரசே முழு மானியமாக ஏற்கும். இந்தச் சலுகை ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அனைவரையும் சென்றடைவதை உறுதிசெய்ய, ஒரு குடும்ப அட்டைதாரர் அல்லது ஒரு நபருக்கு ஒரு தொகுப்பு மட்டுமே வழங்கப்படும். எக்காரணத்தைக் கொண்டும் தொகுப்பைப் பிரித்துத் தனித்தனியாகவோ அல்லது பிற பொருட்களை வாங்கினால்தான் காய்கறித் தொகுப்பு என்ற நிபந்தனையுடனோ விற்கக் கூடாது.
மேலும், இந்த காய்கறி தொகுப்பினை இடைத்தரகர்கள் வாங்குவதைத் தடுத்து, நேரடியாகப் பொதுமக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் எனக் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளார். அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் நாளை மறுநாள் தொடங்கப்படவுள்ள இந்தத் திட்டத்தை, எவ்விதப் புகாருமின்றி தினசரி ஆய்வு செய்து கண்காணிக்குமாறு அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும் கூட்டுறவுத்துறை தலைமை உத்தரவிட்டுள்ளது. பொதுமக்களின் தினசரி சுமையை வெகுவாகக் குறைக்கும் தமிழ்நாடு அரசின் இந்த மாபெரும் திட்டத்திற்கு மாநிலம் முழுவதும் மக்களிடையே சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. பண்டிகை காலங்களில் இது போன்ற திட்டங்கள் அவசியமான ஒன்றாகும்.
#TNGovt #DiwaliOffer #VegetableKit #CooperativeDept #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive