மதுரை:
தவெக எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க 70 கோடி ரூபாய் வரை ஆபர் கொடுக்கப்பட்டதாக அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் மாபெரும் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பல்வேறு அதிரடியான கருத்துகளைப் பதிவு செய்தார்.
மகளிர் குழுக்கள் பயன்பாடு:
அவர் பேசுகையில், “மகளிர் சுய உதவிக் குழுக்களைத் தொடங்கிய நோக்கத்திற்காகவே நாம் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். இதுவரை மகளிர் சுய உதவிக் குழுக்களை அதிமுகவும், திமுகவும் தங்களது கூட்டத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வந்தன. கூட்டங்களில் கூட்டத்தைக் காண்பிக்க மகளிர் சுய உதவிக் குழுவினர் கட்டாயமாக அழைத்து வரப்பட்டனர். ஆனால் இனிமேல் மகளிர் சுய உதவிக் குழுக்கள், மகளிர் மேம்பாட்டுக்கு மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்களை யாராவது தவறாகப் பயன்படுத்தினால் நேரடியாக அமைச்சர் அல்லது சட்டமன்ற உறுப்பினர்களிடம் புகார் தெரிவிக்கலாம். மேலும், தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களைத் திமுகவும், அதிமுகவும் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளன. உட்கட்சியில் எதிர்ப்பு கிளம்பினால் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தலாம்,” என்று அவர் விமர்சித்தார்.
ரூ. 70 கோடி பேரம்:
தொடர்ந்து அவர், “திமுகவும், அதிமுகவும் பணம் நிறைய வைத்துள்ளதால் பதவியைப் பெறுவதற்கு எதை வேண்டுமானாலும் செய்வார்கள். முந்தைய ஆட்சிக் காலங்களில் அரசுப் பதவிகள் விலை பேசி விற்கப்பட்டன. ஒவ்வொரு பதவிக்கும் ஒரு விலை எனப் பணம் வாங்கப்பட்டது. ஆனால் தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுத் துறைகளிலும் லஞ்சங்களைத் தடுக்கத் தீவிரச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. தவெக எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும் முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது. திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகியவை இணைந்து தவெக ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டமிடுகிறார்கள். எங்கள் எம்.எல்.ஏ-க்களுக்கு 70 கோடி ரூபாய் வரை ஆபர் கொடுத்தவர்கள் தற்போது சிக்கிக் கைதாகி நிற்கிறார்கள். எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும் இந்த முயற்சி முன்பிருந்தே நடைபெற்று வருகிறது. அது இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது,” என்று அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
விலைபோக மாட்டார்கள்:
மேலும், “இதை மறைத்துவிட்டுத்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்துவிடுவோம், மூன்று மாதத்தில் வந்துவிடுவோம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இது ஒருபோதும் நடக்காது. எங்கள் எம்.எல்.ஏ-க்கள் பணத்தை வாங்கிக்கொண்டு எங்கேயும் நகரமாட்டார்கள். இது குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதைத் தடுக்கும்போது பல பிரச்சினைகள் வருகின்றன. இருபத்து மூன்று ஆண்டுகாலமாக டாஸ்மாக் துறையில் பாட்டிலுக்குக் கூடுதலாகப் பணம் பெறப்பட்டுள்ளது,” என்று அவர் தெரிவித்தார். அமைச்சரின் இந்தப் பேட்டி தமிழக அரசியல் களத்தில் தற்போது மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
#NirmalKumar #TVK #HorseTrading #DMK #AIADMK #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive