யாழ் நகர மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மலசலகூடத் தொகுதியின் நிர்வாக உரிமை தொடர்பாக இலங்கை போக்குவரத்து சபை (இ.போ.ச) மற்றும் யாழ்ப்பாண மாநகர சபை இடையே ஏற்பட்டுள்ள இழுபறி நிலைக்கு தீர்வு காணும் நோக்கில் சட்ட ஆலோசனை பெற யாழ்ப்பாண மாநகர சபை தீர்மானித்துள்ளது.
இன்று நடைபெற்ற மாநகர சபையின் மாதாந்தக் கூட்டத்தில், குறித்த விடயம் தொடர்பில் முதல்வர் திருமதி மதிவதனி அவர்கள் சட்ட ரீதியான ஆலோசனை பெறுவதற்கான அனுமதி கோரும் முன்மொழிவை சபையில் சமர்ப்பித்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஈ.பி.டி.பி உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான திருமதி யோகேஸ்வரி அவர்கள், இது மக்களின் நலனுடன் தொடர்புடைய முக்கியமான விடயம் என்பதால் இரு தரப்பினரையும் சமரசப் பேச்சுவார்த்தைக்கு இணங்கச் செய்து விரைவான தீர்வை எட்ட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், உடனடியாக சட்ட நடவடிக்கைக்குச் செல்வது திட்டத்தின் நோக்கத்தையே பாதித்து காலதாமதத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன், சட்ட ஆலோசனை பெறப்பட்டால் அதன் விவரங்கள் மாநகர சபையில் முன்வைக்கப்பட்ட பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, உறுப்பினர் மதுசிகன் அவர்கள், இந்த விடயத்தில் சட்ட ஆலோசனை பெறுவதற்குப் பதிலாக நேரடியாக சட்ட நடவடிக்கைக்குச் செல்ல வேண்டும் எனக் கருத்து தெரிவித்தார்.
எனினும், இறுதியில் சட்ட ஆலோசனை பெற்ற பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது