மாமல்லபுரம்:
மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸும், பாரதிய ஜனதா கட்சியும் இணைந்து கொண்டு தமிழ்நாட்டிற்கு எதிராகக் கூட்டு சதி செய்வதாகப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் 31 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் குறிப்பாக, மேகதாது அணை விவகாரம் குறித்து அன்புமணி ராமதாஸ் கட்சி நிர்வாகிகளிடையே ஆவேசமாகப் பேசினார். மேகதாது அணை விவகாரம் குறித்துப் பாட்டாளி மக்கள் கட்சி மக்களிடையே நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “நாடாளுமன்றத்தில் நான் 15 கேள்விகளை எழுப்பினேன். அதில் இரண்டு கேள்விகளுக்கு மட்டுமே மத்திய நீர்வளத் துறை அமைச்சர் பதில் கொடுத்தார். அந்த இரண்டு பதில்களில் மேகதாது குறித்த நிலைப்பாடு என்ன என்பது குறித்து விவரங்கள் வெளிவந்துள்ளன. மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கொடுத்திருக்கக்கூடிய பதில் என்பது தமிழ்நாட்டிற்கு இழைத்திருக்கும் மாபெரும் துரோகம்” என்று விமர்சித்தார். கர்நாடகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள காங்கிரஸும், அங்கு மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிக்கும் பிஜேபியும் இணைந்து தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் வரவிடாமல் சதித் திட்டம் தீட்டி வருவதாக அவர் கடுமையாகச் சாடினார். மேகதாது அணைக்கு அடிக்கல் நாட்டினால் வெற்றி பெற்று விடலாம் என்று இரு கட்சிகளும் சுயநலத்துடன் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், “வரும் ஒன்றாம் தேதி ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு வருகிறார். நம் பக்கம் இருக்கும் நியாயத்தைப் பற்றிப் பேசுகிறாரா என்று பார்ப்போம்” என்று கேள்வி எழுப்பிய அன்புமணி, கர்நாடக அரசியல்வாதிகளிடம் இருக்கும் ஒற்றுமை தமிழ்நாட்டு அரசியல்வாதிகளிடம் இல்லை என்றும், இங்கு ஈகோ மட்டுமே இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இது ஆளும் தவெக அரசின் பிரச்சினை கிடையாது, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பிரச்சினை என்று கூறிய அவர், மேகதாது விவகாரம் குறித்து ஆலோசிக்கத் தமிழக முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தமிழ்நாட்டின் சட்டமன்றக் கட்சித் தலைவர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துக் கொண்டு பிரதமரைச் சந்திக்க முதலமைச்சர் சென்றால், பாமகவும் வரத் தயாராக இருப்பதாக அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
#AnbumaniRamadoss #PMK #MekedatuDam #CauveryIssue #Congress #BJP #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduPolitics #Mamallapuram #AllPartyMeeting #PoliticalUpdate #TamilNewsLive