தாயகத்தின் விடுதலைக்காகத் தங்களது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள், வழக்கம்போல இவ்வாண்டும் நவம்பர் 27ஆம் திகதி தமிழர் தாயகப் பகுதிகள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளன.
இதனையொட்டி, தாயகப் பகுதிகளிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களைச் துப்புரவு செய்யும் சிரமதானப் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் துயிலும் இல்லப் பணிக்குழுவினர், மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து, சிரமதானப் பணிகள் செவ்வாய்க்கிழமை (03) மாலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இம்முறையும் மாவீரர் நாள் நிகழ்வுகளை மிகச் சிறப்பான முறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளைப் பணிக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக, வரும் சனிக்கிழமை மாபெரும் சிரமதானப் பணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, தொடர்ச்சியாக நடைபெறவுள்ள துப்புரவுப் பணிகள், ஏற்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் நினைவேந்தல் நிகழ்வில் அனைத்துத் தமிழ் உறவுகளையும் பெருந்திரளாகப் பங்கெடுக்குமாறு மாவீரர் துயிலும் இல்லப் பணிக்குழுவினர் அன்போடு அழைப்பு விடுத்துள்ளனர்.