புதுடெல்லி:
நெல்லை கவின் ஆணவப் படுகொலை வழக்கில், சுர்ஜித்தின் பெற்றோருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு காவல் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஆணவக் கொலை:
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்ததால், கடந்த 2025 ஜூலை 27 ஆம் தேதி அந்தப் பெண்ணின் சகோதரர் சுர்ஜித்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுர்ஜித், காவலர்களான அவரின் தந்தை சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி மற்றும் உறவினர் ஜெயபால் ஆகிய நான்கு பேரும் சிபிசிஐடி காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். மேலும், சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கொலை நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள், தடய அறிவியல் ஆவணங்கள் மற்றும் உயிரிழந்த கவினின் காதலி, பெற்றோர் உள்பட 83 சாட்சியங்கள் அளித்த வாக்குமூலங்கள் உள்ளிட்டவை அடங்கிய சுமார் 800 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
உயர் நீதிமன்றம் ரத்து:
அந்தக் குற்றப்பத்திரிகையில், சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோருக்குத் தங்கள் மகள் கவினுடன் கொண்டிருந்த உறவு குறித்து 2016 அல்லது 2017-ஆம் ஆண்டிலிருந்தே தெரிந்திருந்தது என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, தங்கள் மீது காவல் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி சரவணன், கிருஷ்ணகுமாரி மற்றும் ஜெயபால் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, அந்தக் குற்றப்பத்திரிகையைக் கடந்த செப்டம்பர் மாதம் ரத்து செய்தது. மேலும், ஜெயபாலுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீனும் வழங்கியது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு:
இதையடுத்து, குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, தமிழ்நாடு காவல் துறையின் குற்றப் பிரிவு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு காவல் துறையின் மனுவைத் தள்ளுபடி செய்து, உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து அதிரடியாகத் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு காவல்துறை தரப்பிற்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
#KavinMurderCase #SupremeCourt #HonorKilling #CBCID #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive