சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்குத் தேவையான மருத்துவச் சான்றிதழ்களை வழங்கும் நடைமுறையை இலகுபடுத்தும் வகையில் புதிய டிஜிட்டல் முறைமை இன்று (24) முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் தலைவர் கிளிஃபோர்ட் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய முறைமையின் கீழ், சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்வதற்கு, விண்ணப்பதாரர்கள் எந்தவொரு தொலைபேசி வலையமைப்பின் ஊடாகவும் நேர ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நேர ஒதுக்கீட்டுச் சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படவுள்ளதாகவும், திகதி மற்றும் நேரத்தை ஒதுக்குவதற்காக விண்ணப்பதாரர்கள் எவ்வித மேலதிகக் கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பதாரர்கள் மருத்துவச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறை மேலும் இலகுபடுத்தப்படுவதுடன், மருத்துவப் பரிசோதனைக்கான நேர ஒதுக்கீட்டையும் விரைவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் தலைவர் கிளிஃபோர்ட் பெரேரா தெரிவித்துள்ளார்.