மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளன்டில் தோட்டத்தின் நடுவத்தைப் பிரிவில், மண் திட்டு சரிந்து வீழ்ந்ததில் கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ். எஸ். புஷ்பகுமார தெரிவித்தார்.
சம்பவம் குறித்து அவர் மேலும் கூறுகையில்: “குறித்த தோட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தை விரிவுபடுத்துவதற்காக நிலத்தை வெட்டிச் செப்பனிடும் பணியில் ஈடுபட்டிருந்தபோதே, எதிர்பாராதவிதமாக பாரிய மண் திட்டு சரிந்து வீழ்ந்துள்ளது.
இதில் மண்ணுக்குள் புதையுண்டு ஆபத்தான நிலையிலிருந்த போதகர், உடனடியாக மீட்கப்பட்டு மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
” இவ்வனர்த்தத்தில் பெரிய நடுவத்தை தோட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மத போதகரான ராஜேந்திரன் கோபிநாத் (வயது 41) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார். இச்சம்பவம் குறித்து மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.