இம்மாத தொடக்கத்தில், ஆஜாக்ஸ் (Ajax) பகுதியிலுள்ள பூங்கா ஒன்றில் சிறுவர்கள் நிறைந்திருந்த விளையாட்டுப் பகுதியிலும் நடைபாதைகளிலும் காரை ஆபத்தான முறையில் ஓட்டிச் சென்றதாக ஓரோராவைச் சேர்ந்த 23 வயதுடைய நபர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 18 ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு சற்று முன்னதாக, ‘லேக் டிரைவ்வே வெஸ்ட்’ பகுதியில் அமைந்திருக்கும் ‘ரோட்டரி பூங்காவில்’ (Rotary Park) வெள்ளை நிற டொயோட்டா செடான் கார் ஒன்று மிகவும் ஆபத்தான முறையில் இயக்கப்படுவதாக அழைப்பு வந்ததாக டர்ஹாம் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.
“சிறிய குழந்தைகள் உட்படப் பல பாதசாரிகள் நிறைந்திருந்த விளையாட்டுப் பகுதி (playground), நீர் விளையாட்டுப் பகுதி (splash pad) மற்றும் நடைபாதைகள் வழியே சந்தேக நபரின் வாகனம் இயக்கிச் செல்லப்பட்டுள்ளது” என்று திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.
இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகப் பதிவாகவில்லை.
பூங்காவிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் ‘வெஸ்ட்னி வீதி தெற்கு’ மற்றும் ‘பேலி வீதி மேற்கு’ பகுதிக்கு அருகே அந்த வாகனத்தைக் கண்டறிந்த காவல் அதிகாரிகள், அதை நிறுத்த முயன்றனர்.
ஓட்டுநர் காவல்துறையினரிடமிருந்து தப்பிச் சென்றதாகவும், சிறிது நேரத்திற்குப் பின் மீண்டும் பூங்காவுக்குத் திரும்பி, பாதசாரிகளுக்கான பாலத்தின் வழியே காரை ஓட்டிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் ‘ஹார்வுட் அவென்யூ தெற்கு’ மற்றும் ‘பேலி வீதி கிழக்கு’ பகுதியில் சந்தேக நபரின் வாகனத்தைக் கண்டறிந்த போலீசார், அது தப்பிச் செல்வதைத் தடுக்க முற்பட்டனர்.
“சந்தேக நபர் காவல்துறையினரிடமிருந்து தப்ப முயன்றபோது, அவரது வாகனம் இச்சம்பவத்துடன் தொடர்பில்லாத GMC SUV ரக கார் மீது மோதியது. அதன்பின்னரே அதிகாரிகள் சந்தேக நபரைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து கைது செய்தனர்” என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த வாகன விபத்திலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஓரோராவைச் (Aurora) சேர்ந்த 23 வயதான இஸ்மாயில் அப்ராஹிம்ஸாதா (Ismail Abrahimzada) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் மீது ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கியமை மற்றும் காவல்துறையினரின் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் நிறுத்தாமல் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.